விவசாயிகளிடம் இருந்து கையகப்படுத்திய நிலங்களை திருப்பி அளிக்கும் சத்தீஸ்கர் அரசு

ராய்ப்பூர்

டாடா நிறுவனம் அமைக்க ஆதிவாசி விவசாயிகளிடம் இருந்து கையகப்படுத்திய நிலத்தை மீண்டும் அவர்களுக்கே சத்தீஸ்கர் அரசு திருப்பி அளிக்க உள்ளது.

சத்தீஸ்கர் மாநிலத்தில் கடந்த 2005 ஆம் ஆண்டு டாடா ஸ்டீல் நிறுவனத்துக்கு ரூ. 19,500 கோடி செலவில் தொழிற்சாலை அமைக்க அப்போதைய பாஜக அரசு அனுமதி அளித்தது. அதற்காக டாடா நிறுவனத்துக்கு பாஜக அரசு பஸ்தார் மாவட்டத்தில் 2044 ஹெக்டேர் நிலத்தை கையகப்படுத்தி அளித்தது. ஆனால் கடந்த 2016 ஆம் ஆண்டு டாடா நிறுவனம் தொழிற்சாலை அமைக்கும் திட்டத்தை கைவிட்டு விட்டதாக அறிவித்தது.

கடந்த நவம்பர் 10 ஆம் தேதி ஜபல்பூரில் நடந்த தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தமது கட்சி ஆட்சிக்கு வந்தால் கையகப்படுத்தப்பட்ட நிலங்கள் மீண்டும் திருப்பி அளிக்கப்படும் என அறிவித்தார். தற்போது அங்கு காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைத்துள்ளது. அம்மாநில முதல்வர் பூபேஷ் பாகல் தமது கட்சி வாக்களித்தபடி டாடா தொழிற்சாலைக்காக கையகப்படுத்தப் பட்ட நிலங்கள் மீண்டும் அளிக்கப்படும் என அறிவித்துள்ளார்.

இது குறித்து பூபேஷ் பாகல் நிலங்களின் விவரங்களை சேகரிக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். முழு விவரமும் கிடைத்த பிறகு அரசின் ஒப்புதலுக்கு தீர்மானம் அளிக்கப்படும் எனவும், அதன் பிறகு நிலங்கள் திருப்பு அளிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். இந்த நடவடிக்கைகளால் சத்தீஸ்கர் மக்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இது குறித்து அம்மாநில ஆதிவாசி விவசாயி ஒருவர், “இந்த நடவடிக்கைகளால் என்னைப் போன்ற 1707 விவசாயிகள் பயனடைவார்கள். அது மட்டுமின்றி 10 கிராமங்களில் உள்ளவர்களுக்கு தங்கள் வாழ்வாதாரம் மீண்டும் கிடைத்துள்ளது. இவ்வாறு நிலம் திருப்பி அளிக்கபடுவது இதுவே முதல் முறை ஆகும். நாட்டில் வேறு எங்கும் இவ்வாறு நடந்ததாக தெரியவில்லை “ என தெரிவித்தார்.

கார்ட்டூன் கேலரி