தமிழிசைக்காக பொய் சொல்லி கையெழுத்து!: பா.ஜ.க.வினர் மீது திடுக் புகார் (வீடியோ)

கடலூர்:

பா.ஜ.க. தமிழக தலைவர் தமிழிசை பற்றி, வி.சி.க. கடலூர் மாவட்ட நிர்வாகி பால புதியவன் தனது முகநூல் பக்கத்தில் ஆபாசமாக கார்டூன் வெளியிட்டதாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

பால புதியவன் மீது கடலூர் மாவட்டம் ஆலப்பாக்கத்தைச் சேர்ந்த சில பெண்கள் கையெழுத்திட்டு காவல்துறையில் புகார் அளித்தனர். இதையடுத்தே பால புதியவன் கைது செய்யப்பட்டார்.

ஆனால் தற்போது புகார் கொடுத்தவர்கள், “பாஜகவினர், இலவச கேஸ் சிலின்டர் தருவதாகக்கூறி கையெழுத்து பெற்றுச் சென்றனர். ஆனால் அதைவைத்து காவல்துறையில் பால புதியவன் மீது புகார் அளித்திருக்கிறார்கள்” என்று தெரிவித்துள்ளனர்.

இது குறித்து வி.சி.க.வின் மாநில துணைச் செயலாளரான கடலூர் ப.தமிழரசன் தெரிவித்ததாவது:

“படிக்கத்தெரியாத அப்பாவி மக்களை ஏமாற்றி பாஜகவினர் கையெழுத்து வாங்கி புகார் அளித்திருக்கிறார்கள். இது குறித்து காவல்துறை ஆய்வாளரிடம் பேசினோம்.

இறுதியில் புகார் மனு கொடுத்த ஆலப்பாக்கம் சிவகாமி வந்து கொடுத்த மனுவை திரும்ப பெற்றால் புதியவனை விடுதலை செய்வதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.  உடனே  சிவகாமியை தேடி கண்டுபிடித்து அழைத்து வந்தோம்.

பிறகு காவல்துறையினர், “சிவகாமியை விசாரணை செய்துவிட்டு புதியவனை இன்னும் அரைமணி நேரத்தில்  விடுதலை செய்கிறோம்” என்றனர்.

அதன்படி காவல்துறையினர் சிவகாமியிடம் வாக்குமூலம் வாங்கினார்கள் சிவகாமியும் நடந்த உண்மையை கூறினார். “எனக்கு எதுவும்  தெரியாது. ஒரு வெள்ளை பேப்பரில் லோன் வாங்கி தருகிறோம் என்று ஏதோ எழுதி என்னிடம் கையெழுத்து மட்டும் வாங்கினார்கள். அதை வைத்து புகார் கொடுத்திருக்கிறார்கள்.

இந்த விவரம் பிறகுதான் எனக்குத் தெரியும். என் பெயரில் அளிக்கப்பட்ட புகாரை வாபஸ் பெறுகிறேன்” என்றார்.

ஆனாலும் பால புதியவனை விடுதலை செய்யவில்லை. இதையேடுத்தே வி.சி.க.வினர் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகிறார்கள்” என்று வி.சி.க.வின் மாநில துணைச் செயலாளரான கடலூர் ப.தமிழரசன் தெரிவித்தார்.

ஆலப்பாக்கம் சிவகாமியின் வாக்கு மூலம் வீடியோ:

https://www.youtube.com/watch?v=zx9nYtJrFfs&feature=yo