உள்நாட்டு விமான பயணிகள் 15கிலோ லக்கேஜ் எடுத்துச்செல்ல அனுமதி! விமான போக்குவரத்துத் துறை

டெல்லி: கொரோனா தொற்று காரணமாக, விமான பயணிகளின் லக்கேஜ் அளவுகள் குறைக்கப்பட்ட நிலையில், தற்போது, பழைய அளவிலான 15 கிலோ வரையிலான லக்கேஜ் எடுத்துச்செல்ல அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.

விமானப் போக்குவரத்தை இயல்பு நிலைக்கு கொண்டு வரும் முயற்சியின் ஒரு கட்டமாக, பயணிகளின் லக்கேஜ் மீது விதிக்கப்பட்டிருந்த அனைத்து கட்டுப்பாடுகளையும் மத்திய அரசு   நீக்கி உள்ளது

இது குறித்து விமானப் போக்குவரத்து அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், பயணிகள், சம்பந்தப்பட்ட விமான நிறுவனங்களின் லக்கேஜ் உச்சரவரம்பிற்கு உட்பட்டு தங்களது பொருட்களை கொண்டு செல்லலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது.

உள்நாட்டு பயணத்திற்கு பயணிகள் ஒவ்வொருவரும் தலா 15 கிலோ எடை வரை செக்-இன் லக்கேஜுகளை கட்டணம் எதுவும் செலுத்தாமல் எடுத்துச் செல்ல விமான நிறுவனங்கள் அனுமதித்துள்ளன.

கொரோனா கட்டுப்பாட்டு நடவடிக்கையாக உள்நாட்டு விமான பயணிகள் ஒரே ஒரு செக்-இன் லக்கேஜ் மற்றும் ஒரு கைப்பையை மட்டுமே எடுத்துச் செல்லலாம் என கடந்த மே மாதம் 21 ஆம் தேதி விமான போக்குவரத்து அமைச்சகம் உத்தரவிட்டது. பின்னர், மே 25 அன்று உள்நாட்டு விமானங்கள் மீண்டும் தொடங்கியபோது இது 20 கிலோவாக உயர்த்தப்பட்டது. மேலும், ஒரு செக்-இன் சாமான்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டன.

இந்த நிலையில் தற்போது (செப்டம்பர் 23ந்தேதி) வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், , சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம், “பயணிகளின் வசதியைக் கருத்தில் கொண்டு,  “பேக்கேஜ் வரம்பு விமானக் கொள்கைகளின்படி இருக்கும்.” என்று தெரிவித்து உள்ளது.

செக்-இன் சாமான்கள் 20 கிலோவுக்கு மிகாமல் இருக்க வேண்டும், அதையும் தாண்டினால்,  விமான நிறுவனங்கள் கட்டணம் வசூலிக்க முடியும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

ஆனால், ஸ்பைஸ்ஜெட் விமான நிறுவனம் விரைவில் செக்-இன் லக்கேஜ் வரம்பை 15 கிலோவாக மீட்டமைக்கும் என்று தெரிவித்து உள்ளது.