சென்னை:
சென்னையின் நீர் ஆதாரமான செம்பரம்பாக்கம் ஏரி முழு கொள்ளளவை எட்ட இருப்பதால், எந்த நேரத்திலும் திறந்து விடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

வடகிழக்கு பருவமழை காரணமாக பல்வேறு ஏரிகளில் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது. செம்பரம்பாக்கம் ஏரியின் மொத்த நீர்மட்டம் 24 அடி. தற்போது 21 அடியை எட்டியுள்ளது. 22 அடியை தொட்டதும் தண்ணீர் திறந்து விடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அனைவருக்கும் அறிவித்த பின்னர்தான் தண்ணீர் திறந்து விடப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னெச்சரிக்கை காரணமாக பூண்டியில் இருந்து செம்பரம்பாக்கம் ஏரிக்கு வரும் தண்ணீர் நிறுத்தப்பட்டுள்ளது.

ஏரி முழுக்கொள்ளளவை எட்டி தண்ணீர் திறந்து விடுவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.

ஒருபக்கம் ஏரி நிரம்பி தண்ணீர் திறந்து விடப்படும் அச்சம் ஏற்பட்டுள்ள நிலையில், மறுபக்கம் ஆபத்தை உணராமல் பொதுமக்கள் தங்கள் குழந்தைகளுடன் செம்பரம்பாக்கம் ஏரியை பார்வையிட்டு செல்பி எடுத்தனர்

கடந்த 2015-ல் செம்பரம்பாக்கம் ஏரியில் எவ்வித முன் அறிவிப்பும் இல்லாமல் திடீரென மொத்தமாக திறந்து விடப்பட்டதால் சென்னை நகரம் வெள்ளத்தில் மூழ்கியது. இதில் பலர் பாதிக்கப்பட்டனர். இதனால் இப்போது கடந்தகால நிகழ்வுபோல் ஏதும் நடைபெறாமல் தடுக்க அதிகாரிகளுக்கு அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன.