இன்று மதியம் திறக்கப்படுகிறது செம்பரம்பாக்கம் ஏரி… அடையாறு கரையோர மக்களே உஷார்…

சென்னை: நிவர் புயல்காரணமாக சென்னையில் தொடர்ந்து மழை கொட்டி வருவதால், செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் முழுகொள்ளவை எட்டியுள்ளது. இதையடுத்து, ஏரியில் இருந்து தண்ணீர் திறந்துவிட தமிழகஅரசு உத்தரவிட்டு உள்ளது. அதன்படி இன்று மதியம் தண்ணீர் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில், அடையாறு உள்பட ஏரிக்கரையோர மக்கள் எச்சரிக்கையாகவும், பாதுகாப்பான இடங்களுக்கு செல்லும்படியும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
இன்று  மதியம் 12 மணிக்கு செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து விநாடிக்கு 1,000 கனஅடி நீர் திறக்கப்படும் என்று நீர்திறப்பு குறித்து உதவி பொறியாளரும் வெள்ள கட்டுப்பாட்டு அலுவலருமான பாபு அறிவித்துள்ளார். 24 அடி முழு கொள்ளளவு கொண்ட செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் 22 அடியை நெருங்குவதால் பொதுப்பணித்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.

இதையடுத்து, செம்பரம்பாக்கம் ஏரி நீர் வெளியேறும் வாய்க்கால் செல்லும் கிராம மக்களுக்கு பொதுப்பணித்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. சிறுகளத்தூர், காவனூர், குன்றத்தூர், திருமுடிவாக்கம், திருநீர்மலை உள்ளிட்ட பகுதிகளுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும்,  அடையாறு ஆற்றின் இருபுறமும் தாழ்வான பகுதியில் வசிப்பவர்களை வெளியேற்ற உத்தரவிடப்பட்டுள்ளது. அடையாறு ஆற்றின் இருபுறமும் தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்கள் கவனமுடன் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.