சென்னை:

மிழகத்தில் மேலும் 2 புதிய மாவட்டங்களாக  தென்காசி, செங்கல்பட்டு பிரிக்கப்பட்டு,  தனி மாவட்டமாக உருவாக்கப்படும் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று சட்டமன்றத்தில் விதி 110ன் கீழ் அறிவிப்பு வெளியிட்டு உள்ளார்.

தமிழக சட்டமன்றத்தில், செங்கல்பட்டு மற்றும் தென்காசியை தனி மாவட்டமாக அறிவிக்கக் கோரி பல ஆண்டுகளாக உறுப்பினர்கள் கோரிக்கை வைத்திருந்தனர். இதுகுறித்து நேற்றும் சபையில் விவாதிக்கப்பட்டது.

இந்த நிலையில், இன்று சட்டமன்றத்தில் கேள்வி நேரம் முடிந்ததும், இரண்டு புதிய மாவட்டங்கள் உருவாக்கப்பட இருப்பதாக  விதி எண் 110ன் கீழ் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு வெளியிட்டார்.

அதன்படி, தமிழகத்தில் காஞ்சிபுரத்தைப்  பிரித்து செங்கல்பட்டு மாவட்டம் உருவாக்கப்படும் என்றும்,  நெல்லையைப் பிரித்து தென்காசி தனி மாவட்டமாக உருவாக்கப்படும் என்றும் அறிவித்து உள்ளார்.

தமிழகத்தில் இதுவரை 32 மாவட்டங்கள் உள்ள நிலையில், கடந்த சட்டமன்ற கூட்டத்தொடரின் போது, கள்ளக்குறிச்சி மாவட்டம் உருவாக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி கள்ளக்குறிச்சி 33வது மாவட்டமாக உருவான நிலையில், 34வது மாவட்டமாக  செங்கல்பட்டும், 35வது மாவட்டமாக தென்காசியும் உருவாகி உள்ளது.

இதற்கிடையில் சபையில் பேசிய அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், கும்பகோணத்தை தனி மாவட்ட மாக்கும் கோரிக்கை உள்ளதால், அது பற்றியும் விரைவில் அறிவிக்கப்பட வாய்ப்பு உள்ளதாகவும், தஞ்சையில் இருந்து  கும்பகோணம் பிரிக்கப்பட்டு தனி மாவட்டம் உருவாக்கப்படும் என்று தெரிவித்தார்.