மருந்துகடை உரியாளரிடம் மாமூல் கேட்டு மிரட்டிய ரவுடி கைது… காவல்துறையினருக்கு வணிகர்கள் நன்றி…

செங்கல்பட்டு:

செங்கல்பட்டு மாவட்டத்தில் மருந்து கடை (மெடிக்கல் ஷாப்) உரிமையாளரை போனில் மாமூல் கேட்டு மிரட்டி விடுதலை சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த ரவுடி சிலம்பரரை போலீசார் 48 மணி நேரத்தில் கைது செய்து நடவடிக்கை எடுத்தனர். இதற்கு வணிகர்கள் காவல்துறையினருக்கு நன்றி தெரிவித்து உள்ளனர்.

செங்கல்பட்டு மாவட்டம்  மன்னிவாக்கம் பகுதியில் மெடிக்கல் ஷாப் வைத்திருப்பவர் வினோத்.  இவரிடம் அந்த பகுதியைச் சேர்ந்த, விசிகவை சேர்ந்த சிலம்பரசன் என்ற ரவுடி, மாமூல் கேட்டு மிரட்டி பேசிய ஆடியோ சமூக வலைதளங்களில் வெளியானது.

இதுதொடர்பாக   ஓட்டேரி காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. மேலும் தமிழ்நாடு வணிகர்கள் சங்க பேரவை சார்பிலும் புகார் அளிக்கப்பட்டது. புகாரின் அடிப்படையில் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் கண்ணன், கூடுவாஞ்சேரி காவல்துறை துணை கண்காணிப்பாளர் ரவிச்சந்திரன் ஓட்டேரி காவல் ஆய்வாளர் பாலாஜி தலைமையில் 3 தனிபடைகள் அமைத்து சிலம்பரசனை தேடிவந்தனர்.

இந்த நிலையில் ரவுடி சிலம்பரசன்  தாம்பரம் இரும்புலியூர் பகுதியில்  பதுங்கி இருப்பது தெரிய வந்தது. அவரை சுற்றி வளைத்த காவல்துறையினர் அதிரடியாக கைது செய்தனர். அவரிடம் இருந்து, மூன்று கைபேசி மற்றும் கத்தி உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன. விசாரணையில் ரவுடி, ஆந்திரா மாநிலம் தப்பி செல்ல முயன்றது தெரிய வந்தது.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய காவல் ஆய்வாளர்,  சிலம்பரசனை 48 மண நேரத்தில் கைது செய்திருப்பதாகவும், அவர் மீது 9 வழக்குகள் உள்ளன.  ஏற்கனவே குண்டாஸ் சட்டத்தில் சிறையில் இருந்த சிலம்பரசன் சமீபத்தில்தான் வெளியே வந்துள்ள நிலையில், தற்போது மிரட்டல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார் என்றார்.

மேலும், செங்கல்பட்டு மாவட்டத்தில் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் ரவுடிகள் குறித்து தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் ரவுடிகள் இடையூறு செய்தால் உடனே போலீசுக்கு தகவல் தெரிவிக்கலாம்.  தகவல் தெரிவிப்பவர் பெயர் விவரங்கள் ரகசியமாக வைக்கப்படும். ஆகவே பொதுமக்கள் எந்த பிரச்சினை வந்தாலும் உடனடியாக போலீஸ் நிலையத்தில் தகவல் தெரிவிக்கலாம் என்று கூறினார்.

இந்த நிலையில், ரவுடி கைது செய்துள்ள காவல்துறையினருக்கு செங்கல்பட்டு மாவட்ட மருந்து வணிகர்கள் சங்கம் வனிகர் பேரமைப்புபொது நல சங்கத்தின் சார்பில் வாழ்த்துளும், நன்றிகளும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதுகுறித்து செங்கல்பட்டு மாவட்ட மருந்து வணிகர்கள் சங்கம்  வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்,  ரவுடி சிலம்பரசனை அதிரடியாக கைது செய்துள்ள  செங்கல்பட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர்   கன்னன் அவர்கள் மற்றும் காவல்துறை அதிகாரி அனைவருக்கும் நன்றி, தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு நமது மாநில தலைவர் திரு AM விக்கிரமராஜா அவர்கள் தமிழ்நாடு மருந்து வணிகர்கள் சங்கம் மாநில தலைவர் செயலாளர் பொருளாளர் மற்றும் அனைத்து நிர்வாகிகள் அனைவருக்கும் செங்கல்பட்டு மாவட்ட மருந்து வணிகர்கள் சங்கம் வனிகர் பேரமைப்புபொது நல சங்கத்தின் சார்பில் வாழ்த்துகள்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.