அடித்து நொறுக்கப்பட்ட செங்கல்பட்டு சுங்கச்சாவடி : விடியற்காலையில் விபரீதம்

செங்கல்பட்டு

ன்று அதிகாலை சுமார் 1.30 மணிக்குச் செங்கல்பட்டு சுங்கச்சாவடி பொதுமக்களால் அடித்துச் சூறையாடப்பட்டுள்ளது.

இன்று விடியற்காலை 1.30 மணிக்கு செங்கல்பட்டு சுங்கச்சாவடியை அரசு பேருந்து ஒன்று கடந்து சென்றுள்ளது  அப்போது அந்த பேருந்து ஓட்டுநருக்கும் சுங்கச்சாவடி ஊழியர்களுக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.  இது சிறிது நேரத்தில் கைகலப்பாக மாறி உள்ளது.   இந்த சுங்கச்சாவடி ஊழியர்கள் வட மாநிலத்தை சேர்ந்தவர்கள் எனக் கூறப்படுகிறது.   இவர்கள் ஓட்டுநரையும் நடத்துநரையும்  கடுமையாகத் தாக்கி உள்ளனர்.

இதனால் அங்கு கடும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.   இதை வீடியோ படம் எடுத்தவர்கள் மொபைல் போனை ஊழியர்கள் பிடுங்கி உடைத்து எறிந்துள்ளனர்.  இது மேலும் பரபரப்பை உண்டாக்கியதால் மக்கள் ஆத்திரம் அடைந்துள்ளனர்.   அங்குள்ள அனைத்து வழி கட்டணம் வசூலிக்கும் சாவடிகளும் அடித்து நொறுக்கப்பட்டு அங்கிருந்த பணம் சூறையாடப்பட்டுள்ளது.

இதையொட்டி அந்தப் பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.   விவரமறிந்த காவல் துறையினர் அங்கு விரைந்து வந்து நிலையைக் கட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.   இது குறித்து வழக்குப் பதிந்த காவல்துறையினர் அங்கு விசாரணை நடத்தி வருகின்றனர்.   இந்த தகராறு குறித்த சரியான காரணம் இன்னும் தெரியவில்லை.