சென்னை:
சென்னையில் மோனோ ரெயில் 2 வழித்தடங்களில் அமைக்கபடும் என்று தமிழக அரசு கூறி உள்ளது.
சட்டசபையில் இன்று போக்குவரத்து துறை மானியக் கோரிக்கை மீதான கொள்கை விளக்க குறிப்புகளை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தாக்கல் செய்தார்.
சென்னை மாநகரில் பல்வேறு வகை போக்குவரத்து பயன்பாட்டில் 27 சதவீத மக்கள் மட்டுமே பொது போக்குவரத்து வசதிகளை பயன்படுத்துகிறார்கள். இது 2026-ம் ஆண்டு 46 சதவீதமாக உயர்த்தப்பட வேண்டும்.
தமிழக அரசு மோனோ ரெயில் திட்டத்தை சென்னையில் தற்போதுள்ள போக்குவரத்து வசதிகளுடன் ஒருங்கிணைத்து செயல்படுத்த முடிவு எடுத்துள்ளது. இதன் அடிப்படையில் மோனோ ரெயில் திட்டத்தை 43.48 கிலோ மீட்டர் தூரத்துக்கு 2 திட்டங்களாக செயல்படுத்த முடிவு எடுத்துள்ளது.

பூந்தமல்லி முதல் கத்திப்பாரா வரை இணைப்புடன் போரூரில் இருந்து வடபழனி வரை முதல் திட்டம் 20.68 கி.மீ. தொலைவுக்கு செயல்படுத்தப்படும்.  இந்த திட்டம் பொது மற்றும் தனியார் பங்களிப்புடன் ரூ.3,267 கோடி மதிப்பீட்டில் வடிவமைத்து நிதி திரட்டி கட்டமைத்து பராமரித்து ஒப்படைக்கும் அடிப்படையில் செயல்படுத்தப்பட உள்ளது.
வண்டலூர் முதல் வேளச்சேரி வரை 22.80 கி.மீ. தொலைவிலான மற்றொரு மோனோ ரெயில் திட்டம் ரூ.3,135 கோடியே 63 லட்சம் மதிப்பீட்டில் பன்னாட்டு நிதி உதவியுடன் செயல்படுத்துவதற்கான கருத்துரு மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது.
மதுரை, திருச்சி, கோவை, தூத்துக்குடி, சேலம் ஆகிய விமான நிலையங்களை மேம்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்த திட்டத்துக்கு தேவைப்படும் நிலங்கள் விமான நிலையங்கள் ஆணையத்திடம் இருந்து பெறப்படும்.
கோரிக்கைகளின் அடிப்படையில் வழங்க தமிழக அரசால் தேவையான நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது