சென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று 2வது அலை தீவிரமடைந்து வந்தாலும், குணமடைவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக  ஆய்வுகள் தெரிவிக்கின்றன.  கொரோனா 2வது அலை பாதிப்பில் இருந்து சென்னையில் 74% குணமடைந்துள்ளனர்; மக்கள் பீதி அடைய வேண்டாம், கொரோனா நெறிமுறைகளை தவறாமல் கடைபிடியுங்கள் என அறிவுறுத்தி உள்ளனர்.

சென்னை தமிழகத்தில் நேற்று  23,310 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இதுவரை 12,72,602 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.அதிகபட்சமாக சென்னையில் நேற்று  6,291 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், இதுவரை சென்னையில் 3,64,081 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.. தற்போதைய நிலையில், சென்னையில் மட்டும்  32,917 பேர் சிகிச்சையில் உள்ளனர். சென்னையில் நேற்று ஒரே நாளில்  58 பேர் உயிர் இழந்துள்ளார்.. இதுவரை 4,952 பேர் மரணம் அடைந்துள்ளனர். இதுவரை  3,26,212 பேர் குணம் அடைந்துள்ளனர். தமிழக கொரோனா பாதிப்பில் சென்னை முதல் இடத்தில் உள்ளது.

சென்னையில் கொரோனா பரவல் குறித்து பிரபல கோவிட் தரவு ஆய்வாளரான விஜயானந்த் (Vijayanand – Covid Data Analyst) கூறியிருப்பதாவது,

சென்னை 2 வது அலையின் தாக்கம் குறித்த தரவுகளை வெளியிட்டு உள்ளார். அதன்படி,  2020ம் ஆண்டு ஏப்ரல் 25ந்தேதி முதல்  2021ம் ஆண்டு ஏப்ரல் 25ந்தேதி வரையிலான பாதிப்புகளை ஒப்பிடும்போது,  74 சதவிகிதம் பேர் பாதிப்பில் இருந்து மீண்டுள்ளனர் என்பது தெரிய வந்துள்ளது. அதாவது, 1,26,916 பேரில் 93,459 பேர் குணமடைந்துள்ளனர்.
கொரோனாவால் ஏற்பட்டுள்ள உயிரிழப்பானது வெறும்  0.6% மட்டுமே. அதாவது  774 பேர் மரணித்துள்ளனர்.  மேலும், கொரோனா லேசான பாதிப்புக்குள்ளானோர்   5-10%  மட்டுமே என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இதனால் பொதுமக்கள் கொரோனா பரவல் அச்சம் கண்டு பீதி அடைய வேண்டாம், ஆனால் எச்சரிக்கையாக இருப்பது அவசியம்,  மாஸ்க் அணிந்து, அத்தியாவசிய தேவையின்றி  வீட்டிலேயே இருந்தால் தொற்று பாதிப்பில் இருந்து தங்களையும், தங்கள் குடும்பத்தினரையும் பாதுகாத்துக்கொள்ளலாம்.
கொரோனா தீவிர பாதிப்புக்குள்ளானவர்கள்  பலர்  மருத்துவமனைகளில் படுக்கை தேவையை நாடுகிறார்கள். அவர்கள்  சென்னை மாநகராட்சி  ஹெல்ப்லைன் 044 46122300/044 2538 4520 தொடர்பு கொள்ளலாம்.  ஆக்ஸிஜன் படுக்கைகள் அல்லது சேர்க்கை மற்றும் தீவிர பாதிப்பு உதவிக்கு  104 க்கு மட்டுமே அழைக்கவும்.
கோவிட் ஸ்கிரீனிங் இணையதளத்த பார்வையிட்டு, தேவையான ஆலோசனை பெறலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.