சென்னை:  3.75 டி.எம்.சி. மழை நீர் கடலில் கலந்து வீணானது

சென்னை,

டகிழக்கு பருவமழை காரணமாக கடந்த சில நாட்களாக தமிழகம் முழுவதும் மழை பெய்து வருகிறது.

சென்னையில் கடந்த 4 நாட்களாக மழை பெய்து வருகிறது. சாலை முழுவதும் தண்ணீர் தேங்கி வீணாக கடலுக்கு செல்கிறது.

கடந்த இரண்டு நாட்கள் மட்டும் சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக சுமார் 3.75 டிஎம்சி அளவு தண்ணீர் வீணாக கடலில கலந்துள்ளது தெரிய வந்துள்ளது.

அதே வேளையில் இன்று தமிழக அமைச்சர் அறிவித்துள்ள சென்னை ஏரிகளின் நீர் மட்டங்களை பார்க்கும்போது, குறைந்த அளவே நீர் வந்துள்ளது தெரிய வந்துள்ளது.

ஏற்கனவே தென்மேற்கு பருவமழை காரணமாக சென்னையில் ஓரளவு மழை பெய்துள்ள நிலையிலும், தற்போது தொடர்ந்து மழை பெய்து வரும் நிலையிலும்கூ சுமார் 20 சதவிகிதம் தண்ணீர்  மட்டுமே  சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் தேங்கி உள்ளது தெரிய வந்துள்ளது.

இதற்கு காரணம் என்ன? சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தண்ணீர் வடிய  கட்டமைப்பு வசதிகளை அரசு செய்யவில்லை என்று குற்றம் சாட்டப்படுகிறது.

ஏற்கனவே கடந்த 2015ம் ஆண்டு இதுபோன்ற ஒரு கனமழை மற்றும் பாதிப்புகளை தமிழக அரசு கண்டபிறகும்கூட, தண்ணீரை வீணாக்காமல் ஏரிகளுக்கு செல்ல தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை.

இந்நிலையில் கடந்த 26ம் தேதி முதல் தமிழகத்தில் வட கிழக்கு பருவமழை தொடங்கி, கடந்த 4 நாட்களாக தொடர்மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக  சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், கடலுார் ஆகிய மாவட்டங்களில்சி உள்ள சிறிய  நீர்நிலைகள் நிரம்பி, உபரிநீர் வெளியேறி வருகின்றன.

பெரும்பாலான  குடியிருப்புக்களில் போதிய மழைநீர் கட்டமைப்பு வசதிகள் செய்யப்படாததாலும், வடிகால்கள் சரிவர அமைக்கப்படாததாலும், கால்வாய்கள் தூர் வாராததாலும், தற்போது பெய்து வரும் மழை நீர், கூவம் மற்றும்  அடையாறில் வெள்ளமாக கரைபுரண்டு ஓடி வங்களா விரிகுடாவில் சென்று தன்னை ஐக்கியப்படுத்திக்கொள்கிறது.

இதுகுறித்து அரசு அதிகாரி ஒருவர் கூறியதாவது,

சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த இரண்டு நாட்களாக பெய்து வரும் மழையின் காரணமாக சென்னையில் உள்ள கூவம் ஆற்றின் மூலம் சுமார் 1000 கன அடி நீரும், பக்கிங்காம் கால்வாய் வழியாக 1400 கன அடி நீரும் கடலுக்கு சென்றுள்ளதாக கூறி உள்ளார்.

மேலும், விருகம்பாக்கம் கால்வாயில் செல்லும் ஏறத்தாழ 600 கன அடி நீர்  வீணாக  கூவத்தில் கலக்கிறது.  அதுபோல  ஓட்டேரி நல்லாவில்  700 கன அடி நீர் ஓடிக் கொண்டிருக்கிறது; இதுவும் பக்கிங்காம் கால்வாயில் கலந்து அனைத்து தண்ணீரும் வீணாக கடலுக்கு செல்கிறது.

இதன் காரணமாக கடந்த 2 நாளில் மட்டும், சுமார்  21 ஆயிரத்து, 900 கன அடி நீர் வீதம் ஏறக்குறைய 3.75 டி.எம்.சி. அளவிலான  மழைநீர் வீணாக கடலுக்கு சென்று உள்ளது.

அதேவேளையில் சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கிய ஏரிகளான  புழல், பூண்டி, சோழவரம், செம்பரம்பாக்கம் ஆகிய நான்கு ஏரிகளிலும் சேர்த்து, மொத்தம், 20 சதவீதம் அளவிற்கு கூட நீர் நிரம்ப வில்லை.

இந்த ஏரிகளும் சரியாக தூர் வாரப்படாமல் தூர்ந்துபோயே உள்ளது. இந்த ஏரிகளின் மொத்த கொள்ளவு 11 டி.எம்.சி. என கூறப்படுகிறது. ஆனால், இவ்வளவு மழை பெய்தும் இதுவரை 2 டிஎம்சி அளவிலான நீர் மட்டுமே இங்கு தேங்கி உள்ளது.

வீணாக கடலுக்கு போய்க்கொண்டிருக்கும் நீரை ஏரிகளுக்கு திரும்புவது குறித்து இதுவரை எந்த அரசும் சிந்திக்க முயற்சி செய்வது இல்லை. இதற்கையின் அருட்கொடையான மழை நீரை சேமிக்க தவறுவதால்தான் சென்னை போன்ற நகரங்களில் குடி தண்ணீருக்கு பற்றாக்குறை ஏற்படுகிறது.

தற்போது பெய்துள்ள  இரண்டு நாள் மழைக்கே, 3.75 டி.எம்.சி., மழைநீர் வீணாகி உள்ள நிலையில், வட கிழக்கு பருவமழை முடிவதற்குள் இன்னும் எத்தனை எத்தனை டிஎம்சி தண்ணீர் வீணாக போகும் என்பதை சற்று சிந்திப்போமானால்…. நமது ஆட்சியாளர்கள்  என்ன செய்கிறார்கள் என்பது தெரியவரும்.