சென்னை: டெல்லி மாநாட்டில் பங்கேற்றதை மறைத்து சென்னையில் இருந்த  வங்கதேசத்தை சேர்ந்த 3 பேரை கைது செய்தனர்.

டெல்லியில் நடைபெற்ற மாநாட்டில் தமிழகத்தில் இருந்து மொத்தம் 1,131 பேர் கலந்து கொண்டதாக கூறப்பட்டது. அதில் 500க்கும் மேற்பட்டவர்களை சுகாதாரத்துறை அதிகாரிகள் கண்டறிந்து தனிமைப்படுத்தியுள்ளனர்.

ஆனால் சிலரை மட்டும் கண்டறிய முடியவில்லை, அவர்கள் வேறு இடத்துக்கு சென்று விட்டனர் என்றும் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் மூலமாக மற்றவர்களுக்கு கொரோனா பரவும் என்பதால் தாமாக முன்வந்து சிகிச்சை பெற தமிழக அரசு வேண்டுகோள் விடுத்தது.

இந்நிலையில் டெல்லி மாநாட்டில் பங்கேற்று திரும்பிய வங்கதேசத்தை சேர்ந்த 3 பேர் சென்னையில் உள்ளனர். அரசுக்கு எந்த தகவலும் தெரிவிக்காமல், சிகிச்சைக்கும் அவர்களாகவே முன்வராமல் சென்னை பெரியமேடு பகுதியில் தங்கியிருப்பது அதிகாரிகளுக்கு தெரியவந்தது.

இதையடுத்து சுகாதாரத்துறை அதிகாரிகள் அளித்த புகாரின் படி பெரியமேடு போலீசார் வங்கதேசத்தினர் தங்கியிருந்த பகுதிகளுக்கு சென்று விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள் 3 பேரும் டெல்லி மாநாட்டுக்கு சென்று வந்தது உறுதியானது.

அதைதொடர்ந்து வங்கதேசத்தை சேர்ந்த 3 பேர் மீது ஐபிசி 188,269,270 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். பிறகு 3 நபர்களையும் சுகாதாரத்துறை அதிகாரிகள் ஆலோசனைப்படி ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.