சென்னை : குடியுரிமை சட்டத்தை எதிர்த்து கோலம் இட்ட 7 பேர் கைது

சென்னை

பெசண்ட் நகரில் குடியுரிமை சட்டம் மற்றும் குடிமக்கள் பதிவேடு உள்ளிட்டவற்றை எதிர்த்துக் கோலமிட்ட ஒரு இளைஞர் உள்ளிட்ட 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குடியுரிமை சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு உள்ளிட்டவற்றுக்கு நாடெங்கும் கடும் போராட்டம் நடைபெற்று வருகிறது.   இந்த போராட்டங்களில் ஒரு சில இடங்களில் வன்முறை வெடித்தது.  அதையொட்டி காவல்துறையினர் அமைதிப் போராட்டம் நடத்துபவர்களையும் கைது செய்து வருகின்றனர்.

சமீபத்தில் மெழுகுவர்த்தி ஏந்தி அமைதிப் போராட்டம் நடத்திய போராட்டக்காரர்கள் கைது செய்யப்பட்டது கடும் சர்ச்சையை உருவாக்கியது.  வன்முறையைத் தடுப்பதாக கூறிக் கொண்டு அமைதிப் போராட்டங்களையும் தடுத்து எதிர்ப்புக் குரலை ஒடுக்குவதாக எதிர்க்கட்சிகள் குறை கூறி  வருகின்றன.

இன்று காலை சென்னை பெசண்ட் நகர் பகுதியில் ஒரு இளைஞர், ஆறு இளம்பெண்கள்  அமைதியாகக் கோலப் போராட்டம் நடத்தினர்.   அவர்கள் தங்கள் கோலத்தில் குடியுரிமை சட்டம், குடிமக்கள் பதிவேடு ஆகியவற்றுக்கு எதிர்ப்பு வாசகங்களைக் கோலத்தில் எழுதி இருந்தனர்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்த காவல்துறையினர் அந்த ஏழு பேரையும் கைது செய்துள்ளனர்.   தங்களை ஏன் கைது செய்ய வேண்டும் என அந்தக் கூட்டத்தில் இருந்த பெண் ஒருவர் கேட்டது வீடியோ பதிவாகி வலைத் தளங்களில் வைரலாகி வருகிறது.  அந்த எழுவரும் அனுமதி இன்றி கோலப் போராட்டம் நடத்தியதால் கைது செய்யப்பட்டுள்ளதாகக் காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.

தற்போது வெளியாகி உள்ள தகவலின்படி கைது செய்யப்பட்ட 7 பேரும் விடுவிக்கப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.