சென்னை:

டிகை குஷ்புவின் டிவிட்டுக்கு உடனடி ஆக்சன் எடுத்த சென்னை காவல்துறை, பொதுமக்களின் டிவிட் மீதும் உடனடி நடவடிக்கை எடுக்குமா? என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி உள்ளனர்.

பிரபல நடிகை மற்றும் அரசியல்வாதியான  குஷ்பு தன் வீட்டின் அருகே சில நாட்கள்  கேட்பாரற்று கிடந்த சரக்கு வேனை படம் பிடித்து தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். அதில் அந்த  கன்டெய்னர் எங்கள் தெரு முனையில் கடந்த 10 நாட்களாக நிற்கிறது. யாரும் இதை பொருட் படுத்தவே இல்லை. இந்த வண்டியில் நம்பர் பிளேட் கூட இல்லாதது, சந்தேகத்தை ஏற்படுத்து கிறது. சென்னை போலீசார் இதை உடனடியாக கவனிக்க வேண்டும் என்று பதிவிட்டிருந்தார்.

இதைக்கண்ட காவல்துறையினர், அதிரடியாக ஓடோடி வந்து நடவடிக்கை மேற்கொண்டனர். அந்த வேன் யாருடையது என விசாரித்து, வேனை அகற்றிய போக்குவரத்து போலீசார், அதன் உரிமை யாளருக்கு அபராதமும் விதித்துள்ளனர்.

அதையடுத்து, குஷ்புக்கு பதிவில் டிவிட் போட்ட காவல்துறையினர், அந்த சரக்குவேனை அங்கிருந்து அகற்றி அபராதம் கட்டுவதற்கான சலான் அளிக்கப்பட்டு விட்டது. குற்றச்செயல்கள் குறித்து புகார் அளிப்பதற்கான எங்கள்  ஜிசிடிபி சிட்டிசன் சர்வீசஸ் ஆப்ஸ் டவுன்லோடு செய்து கொள்ளுங்கள் மேடம் என தெரிவித்திருந்தனர்.

இதற்கு பதில் தெரிவித்து டிவிட் போட்  குஷ்பு, டவுன்லோடு செய்து கொள்கிறேன். வேகமாக நடவடிக்கை எடுத்த உங்களுக்கு பாராட்டுகள்  என்று குறிப்பிட்டிருக்கிறார். இந்த செய்தி வைரலாகி வருகிறது.

அதேவேளையில், குஷ்புவின் டிவிட்டுக்கு அதிரடி ஆக்சன் எடுத்த காவல்துறையினர் சாமானிய மக்களின் கோரிக்கை மீதும் இதுபோல உடனடி நடவடிக்கை எடுப்பார்களா என்று சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.