நிவர் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை: சென்னை விமான நிலையம் மூடல்

சென்னை: சென்னை விமான நிலையம் இன்று இரவு 7 மணிமுதல் நாளை காலை 7 மணிவரை மூடப்படுகிறது.

வங்கக்கடலில் உருவாகி உள்ள நிவர் புயல் நாளை காலை மாமல்லபுரம், காரைக்கால் இடையே கரையை கடக்க  உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, பெரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளன.

சென்னை, வேலூர், கடலூர், விழுப்புரம், நாகை, திருவாரூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், தஞ்சை, மயிலாடுதுறை, திருவண்ணாமலை, அரியலூர், பெரம்பலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவள்ளூர் ஆகிய 16 மாவட்டங்களில் பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இந் நிலையில், நிவர் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இன்று இரவு 7 மணிமுதல் நாளை காலை 7 மணிவரை சென்னை பன்னாட்டு மற்றும் உள்நாட்டு விமான நிலையம் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து சென்னை விமான நிலையத்திலிருந்து செல்லும் மற்றும் வரும் விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. பயணிகளின் பாதுகாப்பு, புயலின் தீவிரம் ஆகியவற்றை கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக விமான நிலைய நிறுவனம் அறிவித்துள்ளது.