சென்னை

சென்னையில் புதியதாக இரண்டு டாக்சி வழி அறிமுகப்படுத்த உள்ளதால் மேலும் 100 விமானங்கள் அதிகமாகப் பறக்க உள்ளன.

தற்போது சென்னை விமான நிலையத்தில் இருந்து தினமும் 400 விமானங்கள் பறந்து வருகின்றன. விமானங்கள் பறக்கும் முன்பு ஓடு தளத்தில் வேகமாக ஓடி அதன் பிறகு வனில் பறக்கத் துவங்கும். ஓடுதளத்தை அடையச் செல்லும்  பாதைக்கு டாக்சி வழி என பெயராகும். முதலில் டாக்சி வழியில் பயணித்த பிறகு விமானங்கள் ஓடு தளத்தைச் சென்றடையும்.

சென்னை விமான நிலையத்தில் தற்போது இரு  அதிவேக டாக்சி வழிகள் அமைக்கப்பட்டு வருகின்றன. இந்தப் பணி இவ்வருட இறுதியில் முடிவடையும் என எதிர்பார்க்கப் படுகின்றது. இந்த டாக்சி வழி தயாரானால் விமானம் விரைவில் ஓடு தளத்தை சென்றடைய முடியும். இதனால் சென்னை விமான நிலையத்தில் இருந்து பறக்கும் விமான எண்ணிக்கை 450 முதல் 500 ஆகும் எனத் தெரிய வந்துள்ளது.

மேலும் இரண்டாம் ஓடு தளம் அமைக்கும் பணிகளும் நடைபெற்று வருகிறது. இவ்வாறு இரண்டாம் ஓடுதளம் அமைக்கப்படும் போது அதன் மூலம் விமான எண்ணிக்கையும் அதிகரிக்கும். எனவே இந்த இரண்டாம் ஓடு தளம் அமைக்க கிண்டி வரை நிலம் கையகப்படுத்தப்பட்டுள்ளது. முதலில் இந்த இரண்டாம் ஓடு தளத்தில் வாரத்தில் ஐந்து நாட்கள் மட்டும் விமானம் செல்லும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது விமானங்கள் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் சென்னையில் இரண்டாம் விமான நிலையம் அமைக்க திட்டமிட்ட போதிலும் பணிகள்  நடைபெறவில்லை. இதனால் இப்போதைக்கு விமானங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க இத்தகைய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.