துபாய்: பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டத்தில், 178 ரன்களை மிக அனாயசமாக எட்டி, 10 விக்கெட் வித்தியாசத்தில் பிரமாண்ட வெற்றியை பெற்றது சென்னை அணி.
முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அணி, 20 ஓவர்களில் 4 விக்கெட் இழந்து 178 ரன்களை எட்டியது. இன்றும் சென்னை அணி டாஸ் தோற்றது.
சேஸிங் விஷயத்தில் கடந்த 3 போட்டிகளாக மோசமாக சொதப்பிய சென்னை அணி இன்று என்ன செய்யும்? என்ற எதிர்பார்ப்பு கூடுதலாக இருந்தது. இந்நிலையில், சென்னை அணியின் ஆட்டம் யாரும் எதிர்பாராத வகையில் அமைந்தது.
முழு ஆட்டத்தையும் அந்த அணியின் துவக்க வீரர்களே முடித்துவிட்டனர். ஷேன் வாட்சனும், ஃபாஃப் டூ பிளெசியும் களமிறங்கினர். அதிரடியாகவும் தீர்க்கமாகவும் ஆடிய அவர்கள், தங்களின் விக்கெட்டை கடைசிவரை விட்டுக் கொடுக்கவில்லை.
ஷேன் வாட்சன் 53 பந்துகளில் 3 சிக்ஸர்கள் & 11 பவுண்டரிகள் விளாசி, 83 ரன்களைக் குவித்தார். டூ பிளசிஸ் 53 பந்துகளை சந்தித்து 1 சிக்ஸர் & 11 பவுண்டரிகளுடன் 87 ரன்களை விளாசினார்.
இறுதியில், 17.4 ஓவர்களிலேயே விக்கெட் இழப்பின்றி, 181 ரன்களை எட்டி வென்றது சென்னை அணி.
இந்த இருவரின் ஆட்டத்தில் உள்ள ஒற்றுமைகள் என்னவெனில், இருவரும் சந்தித்தது தலா 53 பந்துகள் மற்றும் தலா 11 பவுண்டரிகள். இருவரும் அடித்த ரன்கள் 80+. இத்தொடரிலேய‍ே, இதுதான் முதல் 10 விக்கெட் வித்தியாச வெற்றி என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை அணியின் அடுத்தடுத்த ஆட்டங்கள் இதேபோன்று தொடருமா? என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் அதிகரித்துள்ளது.