சென்னை – பெங்களூரு சாலை செப்பனிடும் பணிகள் ஏப்ரலில் துவக்கம்?

சென்னை: மதுரவாயல் – ஸ்ரீபெரும்புதூர் இடையிலான 23.2 கிமீ தொலைவுள்ள சாலையை செப்பனிட்டு வலுப்படுத்தும் பணிகள் ஏப்ரல் மாதம் துவங்கும் என்று கூறப்பட்டுள்ளது.

இது, சென்னை – பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையாகும். இதற்காக, இந்திய தேசிய நெடுஞசாலை ஆணையம் சார்பாக ரூ.49 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இந்த சாலைப் பணி தொடர்பான டெண்டர் ஏற்கனவே விடப்பட்டுள்ளது என்றும், ஏலம் விரைவில் பெறப்படும் என்றும் நெடுஞ்சாலை ஆணையம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நான்கு வழிச்சாலையான இதில், ஒரு நாளைக்கு சுமார் 85,000 பயணியர் வாகனங்கள் சென்று வருகின்றன. ஸ்ரீபெரும்புதூர் சுங்கச் சாவடியில் மட்டும் ஒரு நாளைக்கு 35,000 நான்கு சக்கர வாகனங்களின் போக்குவரத்து பதிவாகிறது.

மேலும், கூடுதலாக 25,000 இருசக்கர வாகனங்கள் கணக்கில் வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே திட்டமிடப்பட்ட வகையிலான சாலைத் அகலப்படுத்தும் திட்டத்தை நடைமுறைப்படுத்த காலதாமதமாகும் என்பதால், தற்போதைய நிலையில் தற்காலிகப் பணிகள் தொடங்கியுள்ளன.