பெங்களூருவை 8 விக்கெட்டுகளில் வென்ற சென்னை அணி!

துபாய்: பெங்களூரு அணிக்கெதிரான போட்டியை 8 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது சென்னை அணி.

டாஸ் வென்ற பெங்களூரு அணி கேப்டன் கோலி, பேட்டிங் செய்ய முடிவெடுத்தார். அதன்படி களமிறங்கிய பெங்களூரு அணியின் துவக்க வீரர் தேவ்தத் படிக்கல் 21 பந்துகளில் 22 ரன்களை அடித்தார். ஆரோன் பின்ச் 15 ரன்களையே அடித்தார். கேப்டன் கோலி 50 ரன்களை அடித்தாலும், எடுத்துக்கொண்ட பந்துகள் 43. டி வில்லியர்ஸ் 36 பந்துகளில் 39 ரன்களை அடிக்க, பெங்களூரு அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 145 ரன்கள் மட்டுமே எடுத்தது.

சென்னை அணியின் சாம் கர்ரன் 3 ஓவர்கள் வீசி, 19 ரன்களை மட்டுமே கொடுத்து, 3 விக்கெட்டுகளை அள்ளினார்.

பின்னர், சற்று எளிய இலக்கை நோக்கி களமிறங்கிய சென்னை அணி, தோற்கும் என்றுதான் பலரும் நினைத்தனர். ஆனால், அந்த அணியின் துவக்க வீரர் ருதுராஜ் கெய்க்வாட் 51 பந்துகளில் 3 சிக்ஸர்கள் & 4 பவுண்டரிகளுடன் 65 ரன்களை அடித்தார்.

டூ பிளசிஸ் 13 பந்துகளில் 25 ரன்களை விளாசினார். அம்பதி ராயுடு 27 பந்துகளில் 39 ரன்களை அடிக்க, கேப்டன் தோனியோ 21 பந்துகளில் 19 ரன்களையே அடித்தார்.

இறுதியில், 18.4 ஓவர்களிலேயே 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 150 ரன்களை எடுத்து வென்றது சென்னை அணி. இது சென்னை அணியின் 4வது வெற்றியாகும். ஆனால், இதன்மூலம் அந்த அணி அரையிறுதிக்கு முன்னேற முடியாது என்பதே உண்மை.