சென்னை: ஆண்டுதோறும் நடைபெறும் தென்னிந்தியப் புத்தகக் கண்காட்சி, வரும் 2020ம் ஆண்டில், நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் ஜனவரி 9ம் தேதி துவங்குகிறது.

பப்பாஸி எனப்படும் அமைப்பு நடத்தும் இந்தப் புத்தகக் கண்காட்சி 43வது ஆண்டாக நடைபெறவுள்ளது. ஜனவரி 9ம் தேதி துவங்கும் கண்காட்சி, ஜனவரி 21ம் தேதிவரை மொத்தம் 13 நாட்கள் நடைபெறவுள்ளது.

கண்காட்சியில் மொத்தம் 700 அரங்குகள் இடம்பெற உள்ளதாகவும், அவற்றில் 15 லட்சத்திற்கும் மேற்பட்ட தலைப்புகளில் 2 கோடிக்கும் அதிகமான புத்தகங்கள் இடம்பெறவுள்ளதாகவும் தகவல்கள் கூறுகின்றன.

வேலை நாட்களில் பிற்பகல் 3 மணிக்கும், விடுமுறை நாட்களில் காலை 11 மணிக்கு கண்காட்சித் துவங்கவுள்ளது. இரவு 9 மணிவரை நீடிக்கும் இந்தக் கண்காட்சிக்கான நுழைவுக் கட்டணம் ரூ.10 மட்டுமே.

இப்புத்தகக் கண்காட்சியில், மாணாக்கர்களின் வாசிக்கும் ஆர்வத்தைத் தூண்டும் வகையிலான நிகழ்ச்சிகள் நடத்தப்படவுள்ளன. இதில் அமைச்சர்கள் உள்ளிட்ட பல பிரமுகர்கள் கலந்துகொள்ளவுள்ளனர் என்று கூறப்படுகிறது.

மேலும், கீழடி அகழ்வாய்வு முடிவுகள் குறித்து, தமிழர் நாகரீகத்தின் பழம்பெருமையையும், திருக்குறளின் சிறப்பபையும் உணர்த்தும் வகையில் ‘கீழடி – ஈரடி’ என்ற பெயரில் ஒரு முப்பரிமாணக் கண்காட்சியும், தமிழக தொல்லியல் துறையுடன் இண‍ைந்து நடத்தப்படவுள்ளது.

பள்ளி & கல்லூரி மாணாக்கர்களுக்கு இலவச நுழைவுச் சீட்டுகள் வழங்கப்படும் என்றும், மெட்ரோ ரயில் பாஸ் வைத்திருப்போருக்கு இலவச அனுமதி வழங்கப்படும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.