45 விநாடியில் தப்பிய சென்னை விமானம்: நடுவானில் பெரும் விபத்து தவிர்ப்பு

நேருக்கு நேர் வந்த இரு விமானங்கள் நடுவானில் மோத இருந்த நிலையில் 45 விநாடிகளில் தப்பிய சம்பவம் தற்போது வெளியாகி உள்ளது.

இந்தியாவில் பல்வேறு பகுதிகளுக்கு இண்டிகோ விமானங்கள் இயக்கப்படுகின்ரன. இந்த நிலையில் சென்னையில் இருந்து கவுகாத்திக்கு கடந்த புதன்கிழமை மாலை இண்டிகோ விமானம் ஒன்று சென்று கொண்டு இருந்தது. இதே போல கவுகாத்தியில் இருந்து கொல்கத்தாவுக்கு மற்றொரு இண்டிகோ விமானம் பறந்து கொண்டு இருந்தது.

கொல்கத்தாவுக்கு சென்ற விமானம் பங்களாதேஷ் எல்லையில், 36 ஆயிரம் அடி உயரத்தில் பறந்துகொண்டிருந்தது. சென்னையில் இருந்து சென்ற விமானம் 35 ஆயிரம் அடி உயரத்தில் இந்திய வான் எல்லையில் மாலை 5.10 மணியளவில் பறந்துகொண்டிருந்தது.

அப்போது பங்களாதேஷ் நாட்டின் விமானப் போக்குவரத்து கட்டுப்பாட்டு அறையில் இருந்து கேட்டு கொண்டதால், கொல்கத்தா விமானம் 35 ஆயிரம் அடியில் பறக்கத் தொடங்கியது. சென்னை  விமானமும் இதே உயரத்தில்தான் பயணித்துக்கொண்டிருந்தது. இதனால் இரு விமானங்களும் ஒன்றுடன் ஒன்று மோதும் நிலை உருவானது.

இதனை கவனித்த கொல்கத்தா விமானக் கட்டுப்பாட்டு அதிகாரிகள், அதிர்ந்தனர். உடனடியாக சென்னையில் இருந்து சென்ற விமானத்தை வேறு பக்கம் திரும்பிச் செல்ல உத்தரவு பிறப்பித்தனர். இதையடுத்து அந்த விமானம் உடனடியாக வேறு திசையில் பயணிக்க ஆரம்பித்தது.   இதனால், இரு விமானங்களும் மோதுவதற்கு 45 விநாடிகள் இருந்த நிலையில் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

விபத்து சூழல் ஏற்பட காரணம் என்று விசாரிக்க இந்திய விமான ஆணையம் உத்தரவிட்டிருக்கிறது.