10, 12ம் வகுப்பில் பள்ளி முதல் மாணவர், நீட் தேர்வில் பூஜ்யம்: முறைகேடு நடந்திருப்பதாக புகார்

சென்னை: 10 மற்றும் 12ம் வகுப்பு தேர்வில் பள்ளியில் முதல் மதிப்பெண் எடுத்த மாணவர், நீட் தேர்வில் பூஜ்யம் மதிப்பெண் எடுத்திருப்பது, அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மருத்துவ படிப்பு நுழைவுத் தேர்வான நீட்டில் பல குழப்பங்கள் நடைபெற்று வருவதாக செய்திகள் வெளியாகி வருகின்றன. வட மாநிலங்களில் தேர்வு எழுதியவர்களின் எண்ணிக்கையை விட தேர்ச்சி பெற்றவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்துள்ளது.

இந் நிலையில் சென்னையில் 10 மற்றும் 12ம் வகுப்பு தேர்வில் பள்ளியில் முதல் மதிப்பெண் எடுத்த மாணவர், நீட் தேர்வில் பூஜ்யம் மதிப்பெண் எடுத்திருப்பது, பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மயிலாப்பூரை சேர்ந்த மாணவர் சாய்  அக்ஷய். நீட் தேர்வு எழுதி இருக்கிறார்.

அவர் கடந்த 6ம் தேதி வெளியான நீட் தேர்வு முடிவை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். ஓஎம்ஆர் ஷீட் நகலை பார்த்து, தமக்கு 517 மதிப்பெண்கள் கிடைக்கும் என்று மதிப்பீடு செய்திருந்தார். ஆனால், அவருக்கு பூஜ்யம் மதிப்பெண் வந்துள்ளதை கண்டு அதிர்ந்து போயிருக்கிறார்.

விடைத்தாள் நகலில் இருப்பது தமது கையெழுத்து இல்லை என்றும், அதில் எதுவும் நிரப்பப்படாமல் இருப்பது முறைகேடு நடந்துள்ளது என்பதை காட்டுகிறது என்று கூறி உள்ளார். இது குறித்து மாணவரின் உறவினர் முத்துக்குமார் கூறுகையில், முடிவுகள் வெளியானவுடன், ஓஎம்ஆர் ஷீட் நகலை வாங்கி பார்த்தோம். அது சாய் அக்ஷய் உடையது இல்லை என்றார்.

சென்னை பாடியை சேர்ந்த மாணவி ஒருவர் கூறுகையில், 410 மதிப்பெண்கள் கிடைக்கும் என்று எதிர்பார்த்தேன், ஆனால் பூஜ்யம் மதிப்பெண்கள் கிடைத்துள்ளது என்று வேதனை தெரிவித்து உள்ளார். அரியலூம் மாணவி மஞ்சுவும் இதே குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார்.