சென்னையில் கடந்த இரண்டு  வருடங்களில் இல்லாத அளவுக்கு, இன்று வெயில் கொளுத்துவதாக  தமிழகத்தின் வெதர்மேன் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டு வெதர்மேன் என்று இணையவாசிகளால் அழைக்கப்படும் பிரதிப் ஜான் தமிழக வானிலையை முன்னரே கணித்துச் சொல்வதில் கில்லாடி.  குறிப்பாக  சென்னை வானிலை குறித்த அவருடைய கணிப்புகள் அப்படியே நடக்கும்.

இந்த நிலையில், சென்னையில் வெயிலின் தாக்கத்தைக் குறித்து இன்று தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார் வெதர்மேன்.

அதில்,  “இந்த வருடத்தின் மிக வெப்பமான நாள் இன்றுதான்” என்று தெரிவித்துள்ளார்.  மேலும், “இன்று சென்னை நகரின் வெப்பநிலை 40 டிகிரி செல்சியஸை தொட்டிருக்கிறது.  கடந்த வருடம் மே மாதம் 28 ஆம் தேதிக்குப் பிறகு, இன்று (15.05.2017)தான் இவ்வளவு  அதிகமான வெப்பம் பதிவாகியுள்ளது. அடுத்தடுத்த நாட்களில் இதைவிடக் கடுமையான வெப்பம் பதிவாகும். சென்னையில், இந்த வருடத்தின்  மிகவும் வெப்பமான நாள் இன்று. ஆகவே சென்னை மக்கள் வெளியே செல்வதைத் தவிர்க்கவும். முக்கியமாக, குழந்தைகள் மற்றும் முதியவர்கள் வெளியே செல்வதைத் தவிர்ப்பது நல்லது’ என்று  வெதர்மேன் பதிவிட்டுள்ளார்.