விடுமுறை தினத்தன்று பள்ளிகள் செயல்பட்டால்…!: சென்னை மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை

சென்னையில் கனமழையால் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்த பிறகும், வகுப்புகளை நடத்தும் பள்ளிகளுக்கு மாவட்ட ஆட்சியர் சண்முக சுந்தரம் கடும் எச்சரிக்கை விடுத்திருக்கிறார்.

அரபிக்க டலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி இருப்பதால் தமிழகம் மற்றும் கேரளாவுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டு இருக்கிறது. இன்று  அதிகாலை முதல் தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது.

பல பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் அறிவிப்பு வெளியிட்டு இருக்கின்றனர்.

சென்னை, நெல்லை, தூத்துக்குடி மாவட்டத்தில் பள்ளிகளுக்கும், காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கும் இன்று விடுமுறை அளிக்கப்பட்டிருக்கிறது.  இதேபோல புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்டத்திலும் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் விடுமுறை அறிவித்தும் வகுப்புகளை நடத்தும் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை மாவட்ட ஆட்சியர் எச்சரித்துள்ளார். அவர் விடுத்துள்ள எச்சரிக்கையில், “இன்று விடுமுறை என்ற அறிவிப்பை பின்பற்றாமல், சில பள்ளிகள் செயல்படுவதாக செய்திகள் வந்துள்ளன. மழலை மாணவர்கள் மற்றும் மற்ற மாணவர்களுக்கு மழை தொடர்பான பிரச்னையால் ஏதேனும் நடந்தால், சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்” என தெரிவித்துள்ளார்.