சென்னை: சென்னையில் கொரோனோ தொற்று பாதிப்பு உள்ள கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளின் எண்ணிக்கை 419ஆக அதிகரிக்கப்பட்டு உள்ளது. அது தொடர்பான பட்டியலை சென்னை மாநகராட்சி விரிவாக வெளியிட்டு உள்ளது.

 
பொதுவாக, கொரோனா வைரஸ் தொற்றால் பாதித்தவர்கள் இருக்கும் பகுதிகள் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளாக அதிகாரிகள் அறிவிப்பர். அந்த பகுதிகளுக்கு ஊரடங்கு காலத்தில் அரசு அறிவித்துள்ள தளர்வுகள் எதுவும் பொருந்தாது.

அதாவது வெளி நபர்கள் யாரும் இந்தப் பகுதிகளுக்கு அனுமதிக்கப்பட மாட்டார்கள். அதே போல அங்கு வசிக்கும் மக்களும் வெளி இடங்களுக்குச் செல்ல அனுமதிக்கப்பட மாட்டார்கள்.


இந் நிலையில், சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளின் சமீபத்திய பட்டியலை சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ளது. இதற்கு முன்பு வரை கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளின் எண்ணிக்கை 357 ஆக இருந்தது.


இப்போது இந்த புதிய பட்டியலின் அடிப்படையில் பார்த்தோம் என்றால் எண்ணிக்கை 419ஆக உயர்ந்துள்ளது. சென்னையின் 15 மண்டலங்களில் அதிகபட்சமாக, ராயபுரத்தில் 85 இடங்கள் கட்டுப்படுத்தப்பட்டுள்ளன. மேலும், திரு.வி.க.நகரில் 75 இடங்கள் கட்டுப்படுத்தப்பட்டுள்ளன.

வளசரவாக்கம் – 45, தேனாம்பேட்டை- 40, தண்டையார்பேட்டை- 40, கோடம்பாக்கம் – 23 ஆகிய எண்ணிக்கையிலான பகுதிகள் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளன.

அதே போல், திருவொற்றியூர் – 20, அடையாறு- 13, மாதவரம் – 13, அண்ணாநகர் -13, மணலி – 9, பெருங்குடி- 6, சோழிங்கநல்லூர் – 6, ஆலந்தூர் – 3 பகுதிகளும் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன. சென்னை மாநகராட்சியின் இந்த புதிய பட்டியல் மூலம் நகரில் கொரோனா தொற்றின் பாதிப்பு வலுவாக இருப்பதை அறிய முடிகிறது.