சென்னை:

சென்னை முழுவதும் கடந்த திங்கட்கிழமை இரவு காவல்துறையினர் நடத்திய அதிரடி வேட்டையில் வழிப்பறிக் கொள்ளையர்கள் உள்பட 555 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த அதிரடி ஆபரேஷனில் சுமார் 1000 காவல்துறையினர் ஈடுபடுத்தப்பட்டதாக கூறப்படுகிறது.

நாளுக்கு நாள் அதிகரித்து வரும் குற்றங்களைத் தடுக்கும் நோக்கில் சென்னை மாநகர காவல் துறை ஆணையர்  ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவுப்படி மாநகரம் முழுவதும் கடந்த திங்கட்கிழமை இரவு சுமார்  130 இடங்களில் அதிரடி வாகன சோதனை நடத்தப்பட்டது. மேலும் பல இடங்களில் உள்ள லாட்ஜ்கள், சந்தேகத்திற்கிடமான இடங்களிலும் சோதனை நடத்தப்பட்டது. இந்த சோதனையில் சுமார் 1000 போலீசார் ஈடுபட்டனர்.

இந்த புயல்வேக அதிரடி நடவடிக்கையில் ஏராளமானோர்  சிக்கினர். அவர்களில், 41 பிடியாணை நிறைவேற்றப்பட்ட குற்றவாளிகள், கொலை குற்ற வழக்கில் தொடர்புடைய 5 ரவுடிகள், வழிப்பறி மற்றும் செல்போன், செயின் பறிப்பு சம்பவங்களில் தொடர்புடைய 78 பேர் மற்றும், கொலை கொள்ளைய  முயற்சி வழக்கில் தொடர்புடைய 15 பேர் உட்பட மொத்தம் 159 குற்றப்பின்னணி உள்ள நபர்கள் கைது செய்யப்பட்டதாக காவல்துறை தெரிவித்து உள்ளது.

மேலும்,  பழைய குற்ற வழக்குகளில் தண்டனை பெற்ற 29 குற்றவாளிகள், பொதுமக்களுக்கு இடையூறு மற்றும் தொல்லை ஏற்படுத்திய 68 குற்றவாளிகள், சந்தேகத்திற்கு இடமான வகையில் சுற்றி திரிந்த 301 நபர்கள் உள்பட மொத்த  555 பேரை போலீசார் கைது செய்தனர்.

இத்துடன் உரிமம் இல்லாத 85 வாகனங்களும்  பறிமுதல் செய்யப்பட்டதாக காவல்துறை அறிவித்து உள்ளது.

இந்த அதிரடி நடவடிக்கை சென்னை நகரின் வடக்கு மற்றும் மேற்கு பகுதிகளை மையமாகக் கொண்டு நடைபெற்றது. இதற்கு கூடுதல் ஆணையர் ஆர் தினகரன் முன்னிலையில், இரண்டு கூட்டு ஆணையர்கள் மற்றும் ஆறு துணை ஆணையர்கள்  மேற்பார்வையில் சுமார்  1,000 போலீசார் ஈடுபட்டனர்.