சென்னை

சென்னையில் தனிமைப் படுத்தப் பட்டுள்ளவர்களைக் கண்காணிக்கத் தினம் ரூ.500 ஊதியத்தில் 6720 தன்னார்வு தொண்டர்களை மாநகராட்சி நியமித்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா தாக்குதல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.  தினசரி 2000க்கும் அதிகமானோருக்குப் பாதிப்பு உறுதி செய்யப்படுகிறது.  இதுவரை சுமார் 56 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.  இதில் சென்னையில் மட்டும் 39 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.  இதனால் சென்னை மற்றும் 3 சுற்றுப்புற மாவட்டங்களில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

தற்போது தினசரி சுமார் 1200 நோயாளிகள் வரை கண்டறியப்படுவதால் அவர்கள் தனிமைப் படுத்தும் நடவடிக்கை நடைபெறுகிறது.  இவர்கள் அனைவரும் நாட்களுக்கு தனிமையில் வைக்கப்படுகின்றனர். இவர்களுக்குத் தொடர்புள்ளவர்கள் மூன்று வீடுகளுக்கு ஒருவர் என மொத்தம் 3600 வீடுகளில் தினம் 1200 பேர் கண்காணிப்பில் வைக்கப்பட்டு வருகின்றனர்.  மொத்தம் 67200 வீடுகளில் 30 நாட்கள் கண்காணிப்பில் வைக்கப்பட உள்ளனர்.

இவர்களைக் கண்காணிக்க 10 வீடுகளுக்கு ஒருவர் வீதம் 6720 தன்னார்வ தொண்டர்கள் சென்னை மாநகராட்சியால் நியமிக்கப்பட்டுள்ளனர்.  இவர்களுக்குத் தினசரி ரூ.500 ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.  இதற்காக ரூ.40.32 கோடி நிதி பேரிடர் மேலானமை நிவாரணமாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.    இந்த தொண்டர்கள் நான்கு மாதம் பணி புரிய உள்ளனர்.