சென்னை,

சென்னை மாநகராட்சியில் பணம் இல்லாததால்,  மாநகராட்சி பணியாளர்களின் சரண்டர் சம்பளம் வழங்கப்படாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதன் காரணமாக மாநகராட்சி ஊழியர்கள், தொழிலாளர்கள் கடும் அதிர்ச்சிக்குள்ளாகி உள்ளனர். பணம் இல்லாமல் சென்னை மாநகராட்சி திவாலாகி விட்டதா என கேள்வி எழுப்பி உள்ளனர்.

ஏற்கனவே சென்னையில் செயல்பட்டு வரும்  அம்மா உணவகத்துக்காக அதிக பணம் செலவாகி வருவதாக கூறப்பட்டு வரும் நிலையில், தற்போது ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்க பணம் இல்லை என்ற கூறுவதால் மாநகராட்சி ஊழியர்களிடையே பரபரப்பு நிலவி வருகிறது.

அரசு ஊழியர்கள் வருடந்தோறும் தங்களுக்கான சரண்டர் விடுமுறைகான சம்பளத்தை பெறுவது வழக்கம். அதுபோல இந்த ஆண்டு, சென்னை மாநகராட்சியில் பணிபுரியும்  ஊழியர்கள், மாநக ராட்சி நிர்வாகத்திடம் ஒப்படைத்த ‘சரண்டர் லீவ்’  அப்படியே கிடப்பில் போடப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது.

மாநகராட்சியில் பணம் இல்லாததாலேயே சரண்டர் லீவுக்கான சம்பள பணம் வங்கியில் செலுத்தப்படாமல் இருப்பதாக கூறப்படுகிறது.

இதன் காரணமாக சென்னை மாநகராட்சியில் பணியாற்றும் துப்புரவுத் தொழிலாளர்கள், வாகன ஓட்டுநர்கள், உதவியாளர்க பணம் கைக்கு வராமல் பெரும் அவதிக்கு ஆளாகியுள்ளனர்.

அரசு துறைகளில் பணிபுரியும் அடிமட்ட ஊழியர்கள் இந்த சரண்டர் பணத்தை வைத்தே, குழந்தை களின் படிப்பு செலவு மற்றும் விசேஷங்களுக்கு செலவிட்டு வந்தனர்.

தற்போது, சரண்டர் லீவுக்கான சம்பள பணம், மாநகராட்சியில் பணம் இல்லாத காரணத்தால் கொடுக்கப்படாமல் இழுத்தடிக்கப்படுவதால்  மிகவும் மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளதாக கூறப்படுகிறது.

ஏற்கனவே, மாநகராட்சி நிதி தட்டுப்பாடு காரணமாக சென்னையில் உள்ள அம்மா உணவகங்களின் தரம் குறைந்துவிட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள நிலையில், தற்போது ஊழியர்களுக்கு சரண்டர் பணம் கொடுக்காதது குறித்தும் கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகிறது.

சென்னை  மாநகராட்சி பணம் இல்லாமல் திவாலாகி விட்டதா? என கேள்வி எழுந்துள்ளது.

இதன் காரணமாக விரைவில் போராட்டம் நடத்தவும் மாநகராட்சி ஊழியர்கள் ஆலோசித்து வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.