கொரானா நோய் பாதுகாப்பு மையங்கள் தொடங்க தனியார் மருத்துவமனைகளுக்கு சென்னை மாநகராட்சி அழைப்பு…!

சென்னை: கொரானா நோய் பாதுகாப்பு மையங்கள் தொடங்க தனியார் மருத்துவமனைகளுக்கு சென்னை மாநகராட்சி அழைப்பு  விடுத்துள்ளது.

கொரோனா நோய் பாதுகாப்பு மையங்கள் தொடங்க விருப்பம் உள்ள மருத்துவமனைகள், மாநகர நல அலுவலரை அணுகுமாறு சென்னை மாநகராட்சி அறிக்கை வெளியிட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு:

கொரோனா வைரஸ்  காய்ச்சல் உலகமெங்கும் பரவியுள்ள நிலையில், உலக சுகாதார நிறுவனம் உலகமெங்கும் அவசரநிலையை பிரகடனப்படுத்தி உள்ளது. மேலும் கட்டுப்படுத்தக்கூடிய தொற்று நோயாகவும் இதை அறிவித்துள்ளது.

தற்போது பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் நோவல் கொரோனா வைரஸ் காய்ச்சலின் தாக்கம் தற்போது அதிகரிக்கத் தொடங்கி உள்ள காரணத்தினால், நாள் ஒன்றுக்கு 2000 முதல் 2500 நபர்கள் வரை நோயினால் பாதிக்கப்படுகிறார்கள்.

பெருநகர சென்னை மாநகராட்சியில் 12 கொரோனா நோய் பரிசோதனை மையங்கள் மூலம் உரிய பரிசோதனைகள் மேற்கொண்டு, மருத்துவமனை சிகிச்சைக்கோ, வீடு பராமரிப்பு மைய சிகிச்சை அல்லது வீட்டில் தனிமைப்படுத்திக் கொள்ளும் வசதி ஆகிய முறைகளில் ஒரு வழியில் கொரோனா கண்டவர்களுக்கு மருத்துவ சேவை அளிக்கப்பட்டு வருகிறது.

மேலும் பெருநகர சென்னை மாநகராட்சி 14 கோவிட் பாதுகாப்பு மையங்களில், 11000 படுக்கைகளுடன் மிகக்குறைந்த தொற்று உள்ளவர்களுக்கும் மற்றும் அரசு மருத்துவமனை மூலம் பரிந்துரைக்கப்படுபவர்களுக்கும் போதுமான மருத்துவ சிகிச்சை அளிக்க  வசதி ஏற்படுத்தி உள்ளன.

பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை வழங்கவும் மற்றும் கொரோனா தொற்று கண்டவர்கள் வசிப்பிடத்திற்கு அருகிலேயே சிகிச்சை பெறும் பொருட்டும், சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளிலுள்ள விருப்பமுள்ள மற்றும் சிகிச்சை அளிக்க போதிய உட்கட்டமைப்பு வசதி உள்ள தனியார் மருத்துவமனைகள் தனியாகவோ அல்லது பிற தங்கும் விடுதிகள் உடன் இணைத்தோ, நோய் பாதுகாப்பு மையங்கள் ஆரம்பிக்க அனுமதி அளிக்கிறது.

அவ்வாறு  கொரோனா நோய் பாதுகாப்பு மையங்கள் தொடங்க விருப்பம் உள்ள மருத்துவமனைகள், படுக்கை வசதி, மருத்துவர்கள்,  மருத்துவ பணியாளர்கள் மற்றும் மருத்துவ வசதிகள் உள்ளிட்ட விவரங்களுடன் கூடுதல் மாநகர நல அலுவலர் தலைமையகம் (944 502 6050)  என்ற எண்ணில் அணுகுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது என்று அதில் கூறப்பட்டுள்ளது