சென்னை

கொரோனா தனிமைப்படுத்தலுக்காக பயனின்றி உள்ள வீடுகள் மற்றும் விடுதிகளைத் தந்து உதவுமாறு சென்னை மாநகராட்சி  வேண்டுகோள் விடுத்துள்ளது.

உலக நாடுகளை அச்சத்தில்  ஆழ்த்தி உள்ள கொரோனா வைரஸ் தொற்று இந்தியாவில் 650க்கும்  மேற்பட்டவர்களைப் பாதித்து 16 பேரைப் பலி வாங்கி உள்ளது.  தமிழகத்தில் 27 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.  கொரோனா தடுப்பு நடவடிக்கைகளாகப் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மத்திய மாநில அரசுகள் மேற்கொண்டு வருகின்றன.

சென்னை நகரில் மக்கள் கூடும் இடங்களில் கிருமி நாசினிகளைத் தெளிக்க பவர் ஸ்பிரேயர் மற்றும் 500 நவீன இயந்திரங்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.  ஒவ்வொரு வார்டுகளுலும் இந்த பணிக்கான பணியாளர்களைச் சென்னை மாநகராட்சி நியமித்துள்ளது. கொரோனாவால் தனிமைப் படுத்தப்பட்டோரின் வீடுகளில் ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டுள்ளன.

சென்னை மாநகராட்சியின் சமூகக் கூடங்களில் வீடற்றோர் பலர் தங்க வைக்கப்பட்டு அவர்களுக்கு உணவு வழங்கல் மற்றும் மருத்துவப் பரிசோதனைகள் நடைபெறுகின்றன.   பேருந்து நிலையங்கள், மார்கெட் பகுதிகள் உள்ளிட்ட இடங்களில் அத்தியாவசியம் உள்ளோர் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றனர்.

சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் ”கொரோனா காரணமாகப் பலர் தனிமைப்படுத்தப் பட்டதால் தனிமைப்படுத்தல் இடங்கள் அதிகம் தேவைப்படுகிறது.  எனவே பொதுமக்களிடம் பயன்படுத்தப்படாத விடுதிகள் மற்றும் வீடுகள் இருந்தால் அவற்றைத் தந்து  மாநகராட்சிக்கு  உதவி செய்யலாம்.  இது அவசர காலத்தில் புரியும் பேருதவியாக அமையும்” என வேண்டுகோள் விடுத்துள்ளார்.