சென்னை

சென்னை நகரில் வாகனங்களை நிறுத்த இடம் ஒதுக்கும் செயலி ஒன்றை மாநகராட்சி நிறுவி உள்ளது.

சென்னை நகரின் பரபரப்பான பல இடங்களில் வாகனம் நிறுத்துவது மிகவும் கடினமானதாக உள்ளது.   அந்த வாகன நிறுத்தம் இருக்குமிடத்தைக் கண்டறிவதை விட அங்கு இடம் பிடிப்பது பெரும் பாடாக உள்ளது.   தற்போது சென்னை நகரில் 7667 வாகன நிறுத்துமிடம் உள்ளன.  அவை விரைவில் 23000 ஆஅ மாற்ற உள்ளதாக மாநகராட்சி அறிவித்துள்ளது.

ஆயினும் எந்த இடத்தில் நிறுத்துமிடம் காலியாக உள்ளது என்பதைத் தெரிந்துக் கொள்வதில் ஓட்டுநர்களுக்கு ஒரு மாபெரும் சோதனையாக உள்ளது.  அதை சுலபமாக்கச் சென்னை மாநகராட்சி, கிரேட்டர் சென்னை ஸ்மார்ட் பார்கிங் என்னும் மொபைல் செயலியை நிறுவி உள்ளது.    இதன் மூலம் சென்னை நகரின் பரபரப்பான பகுதிகளான பாண்டி பஜார், புரசைவாக்கம் உள்ளிட்ட பல இடங்களிலும் நிறுத்துமிடத்தை கண்டறிய முடியும்.

இந்த செயலியை மாநகராட்சியுடன் இணைந்து நடத்த உள்ள டூர்க் மீடியா சர்வீசஸ் இயக்குநர் தமிழரசன், “ காலியாக உள்ள இடத்தை கண்டறிய நகரில் 500 காமிராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.  விரைவில் அது 680 ஆக அதிகரிக்கப்பட உள்ளது.   இந்த காமிராக்கள் காலியாக உள்ள இடங்கள் குறித்து இணையம் மூலம்  செயலிக்கு அறிவிக்கும்.   இதைப் பயன்படுத்துவோர் இருக்கும் இடத்துக்கு அருகில் உள்ள காலி இடத்தை செயலி ஒதுக்கீடு செய்யும்.

நிறுத்துமிட ஊழியர்களுக்கும் மொபைல் மூலம் விவரம் அறிவிக்கப்படும்.   விழாக்காலங்களில் பிரதான சாலையில் உள்ள நிறுத்துமிடங்கள் நிரம்பி விட்டால் அருகில் உள்ள உட்சாலைகள் நிறுத்துமிடம் ஒதுக்கீடு செய்யப்படும்.   இதன் மூலம் நடைபாதை ஓரமாக நிறுத்தி விட்டு செல்லும் பழக்கம் அடியோடு குறைந்து விடும்.  இதனால் போக்குவரத்து நெரிசல் வெகுவாக குறையும்” எனத் தெரிவித்துள்ளார்