சென்னை: சென்னையில் 30 ஆண்டுகளுக்கு சாலைகள் சேதம் ஆகாத வண்ணம் மெகா ஸ்ட்ரீட்ஸ் என்ற திட்டத்தை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தொடங்கி வைத்தார்.

சென்னை எம்.ஆர்.சி. நகரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் திட்டத்தை தொடங்கி வைத்த அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேசியதாவது: முதற்கட்டமாக அண்ணா நகர், தண்டையார்பேட்டை, நுங்கம்பாக்கம், மயிலாப்பூர், வேளச்சேரி மற்றும் அடையாரில் 110 கிலோமீட்டர் தூரத்துக்கு இந்தத் திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது/

இந்த திட்டத்தின் மூலம் 30 ஆண்டுகளுக்கு சாலைகள் சேதப்படுத்துவது தடுக்கப்படும். சென்னையை தொடர்ந்து கோவை, மதுரை, திருப்பூர், ஈரோடு, தஞ்சாவூர், வேலூர் உள்ளிட்ட மாநகாட்சிகளிலும் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படும் என்றார்.

டான்ஜெட்கோ தலைவர் விக்ரம் கபூர் பேசியதாவது: மின்சாரம், நீர், பார்க்கிங் மற்றும் பிற தேவைகளை அடிக்கடி மேம்படுத்த வேண்டும். வீதிகள் எதிர்கால மேம்பாட்டிற்கு ஏற்றவையாகவும், தோண்டப்படாமலும் வடிவமைக்கப்பட வேண்டும் என்றார்.

நிகழ்ச்சியில் பேசிய காவல்துறை கமிஷனர் ஏ.கே. விஸ்வநாதன், பாதசாரிகள் மற்றும் சைக்கிள் ஓட்டுநர்களுக்கு இடம் ஒதுக்குவதன் மூலம் பல சாலை விபத்துக்கள் மற்றும் விபத்துக்களைக் குறைக்க முடியும் என்றார்.

தமிழக அரசின் இந்த திட்டத்தின் மூலம் நடந்து செல்வோர், சைக்கிள்களை உபயோகப்படுத்துவோருக்கு தனி பாதைகள் அமைக்கப்படும். சர்வதேச தரத்தில் நடைபாதையில் இருக்கைகள், உயர் ரக மின் விளக்குகள் அமைக்கப்படும்.

முறையான பார்க்கிங் வசதி, சுரங்கப்பாதை வசதிகள், நடைபாதை வியாபாரிகளுக்கு தனி இடம், மழைநீர் வடிகால் உள்ளிட்ட வசதிகள் மேம்படுத்தப்படும்.

ரயில் நிலையங்கள், பறக்கும் ரயில் நிலையங்கள், பேருந்து நிலையங்கள், பேருந்து நிறுத்தங்கள் ஆகியவற்றை இணைத்து இத்திட்டம் தயாரிக்கப்பட உள்ளது. பள்ளிகள், அங்கன்வாடிகள், கல்லூரிகள், வழிபாட்டுத்தலங்கள், வரலாற்று சிறப்பு மிக்க இடங்கள், அருங்காட்சியகங்கள், பூங்காக்கள், நீர்நிலைகள், மார்க்கெட்டுகள் உட்பட மக்கள் அதிகமாக கூடும் இடங்களை இணைத்து திட்டம் செயல்படுத்தப்படும்.

பொது இடங்களை மறுசீரமைக்கும் திட்டம், நீர்நிலைகளை இணைத்து பசுமை வழித்தடம் திட்டம், பாலங்கள், சுரங்கப்பாதைகள் மறுசீரமைப்புத் திட்டம் ஆகியவையும் செயல்படுத்தப்படவுள்ளன. அண்ணாநகர், தண்டையார்பேட்டை, நுங்கம்பாக்கம், மயிலாப்பூர், வேளச்சேரி, அடையாறில் 72 சாலைகள் மறு வடிவமைப்பு செய்யப்படவுள்ளன.