சென்னை

சென்னை மாநகராட்சி பள்ளிகள் புதுப்பிக்கும் வேலை விரைவில் தொடங்க உள்ளது.

பொதுவாக மாநகராட்சி பள்ளிகள் என்றாலே ஒரு பழமையான கட்டிடம், உடைந்த கதவுகளுடன் கொண்ட நுழைவாயில் உள்ளிட்டவைககள் மக்கள் நினைவுக்கு வருவதாகச் சொல்கின்றனர். பலர் இந்த கட்டமைப்புக்கள் சரியாக இல்லாததால் தங்கள் குழந்தைகளை இப்பள்ளிகளில் சேர்க்க விரும்புவதில்லை. ஆள் பாதி ஆடை பாதி என்பதைப் போல் பல நல்ல ஆசிரியர்கள் பணி புரிந்தும் பல பள்ளிகளில் மாணவர் சேர்க்கை மிகவும் குறைவாக உள்ளது.

இந்நிலையை மாற்றச் சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது, இது குறித்து மாநகராட்சி ஆணையர் ஜி பிரகாஷ், “மக்களிடையே மாநகராட்சி பள்ளிகள் குறித்து மிகவும் மோசமான அபிப்ராயம் உள்ளது. அதனால் 1.75 லட்சம் மாணவர்கள் பயில வேண்டிய இடத்தில் 82000 மாணவர்கள் மட்டுமே உள்ளனர். இதை மாற்ற நாங்கள் பல முறையில் முயலுகிறோம். அதன் முதல் படியாகப் பள்ளியில் அமைப்பை மாற்ற உள்ளோம். தனியார் பள்ளிகளுக்குச் சமமாக இங்கும் வசதிகளை அதிகரிக்க உள்ளோம்.

முதலில் மக்களைக் கவரும் பல வண்ணங்களுடன் கூடிய கட்டிட அமைப்பை மாற்ற உள்ளோம். ஒவ்வொரு பள்ளியின் நுழைவாயிலும் அலங்கார வளைவு அமைத்து அதில் பள்ளியின் பெயரைப் பொறிக்க உள்ளோம். பெரிய பெரிய கதவுகளை அமைக்க உள்ளோம். பல பள்ளிகளில் விளையாட்டு மைதானமிருந்தும் அதில்  கூடைப்பந்து, கிரிக்கெட்,கால்பந்து உள்ளிட்ட எந்த விளையாட்டும் விளையாடும் வசதி இல்லை. எனவே இந்த விளையாட்டு மைதானங்களுக்குத் தேவையான வசதியைச் செய்து தரத் திட்டமிட்டுள்ளோம்.

மேலும் இந்த பள்ளிகளில் தோட்டக்கலை, மொட்டை மாடித் தோட்டம் குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த  உள்ளோம். இதற்காக ஒரு குழு  அமைத்துள்ளோம். அந்தக் குழு இதற்கான பணிகள் குறித்து நடவடிககி எடுக்கும். இதற்கான மதிப்பீடு தயார் செய்து வருகிறோம். இன்னும் ஒரு மாதத்தில் இந்த பணிகள் தொடங்கும்.” என அறிவித்துள்ளார்.