சென்னை மாநகராட்சி : “கொரோனா வைரஸ்” முன்களப் பணியாளர்களுக்கு வாரத்திற்கு 5 நபர்களை ‘பிடித்துவர’ இலக்கு

 

சென்னை :

சென்னை மாநகராட்சிக்கு உட்பட்டப் பகுதிகளில் தினமும் ஒவ்வொரு வீடாகச் சென்று காய்ச்சல் பரிசோதனை மேற்கொள்ள சுமார் 12,000 தாற்காலிகக் காய்ச்சல் கணக்கெடுப்புப் பணியாளர்கள் நியமிக்கப்பட்டிருக்கிறார்கள்.

நாளொன்றுக்கு சுமார் 75 முதல் 100 வீடுகளுக்குச் சென்று பரிசோதனை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டிருக்கும் இவ்ரகளுக்கு, வாரம் ஒன்றுக்கு குறைந்தபட்சமாக 5 நபர்களுக்காவது காய்ச்சல் இருப்பதை உறுதி செய்து பதிவு செய்ய வேண்டும், அப்படி செய்யாத இடங்களில் உள்ள தற்காலிகப் பணியாளர்கள் அந்த இடத்தில் தொற்று அறிகுறி குறைந்துள்ள காரணத்தால் அவர்களது தற்காலிகப் பணியிலிருந்து நீக்கப்படுவார்கள் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதன் காரணமாக, கடந்த 6 மாதங்களாக பணியில் இருந்த பணியாளர்கள், தங்கள் பகுதியில் காய்ச்சல் இருப்பதை உறுதி செய்ய ஒவ்வொரு வீட்டிற்கும் இரண்டு நாள் இடைவெளியில் அடிக்கடி சென்று பார்ப்பதும், உடல் வெப்பநிலை லேசாக அதிகரித்திருந்தாலே அவர்களுக்கு காய்ச்சல் இருப்பதாகக் கூறி பதிவு செய்வதும் அதிகரித்து வருவதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இது குறித்து, செய்தி வெளியிட்டுள்ள தி டைம்ஸ் ஆப் இந்தியா நாளிதழ், காய்ச்சல் கணக்கெடுப்புப் பணியாளர்கள் சிலர், “வீடுகளுக்குச் சென்று கணக்கெடுப்பு நடத்தும் போது பலர் தங்களுக்கு உள்ள அறிகுறிகளைச் சொல்ல மறுக்கின்றனர்”. மேலும், “எங்களது உயரதிகாரிகள் உங்கள் பதிவேடுகளில் குறிப்பிடப்படாத யாரேனும் உங்கள் பகுதியில் இருந்து காய்ச்சல் அறிகுறியுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டால் உங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று அச்சுறுத்துகின்றனர்” என்று கூறியதாக செய்தி வெளியிட்டுள்ளது.

இது குறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், “மருத்துவ முகாமிற்கு வராதவர்கள் குறித்தும் காய்ச்சலுடன் இருப்பவர்கள் குறித்து விரிவாக தெரிந்து கொள்வதற்கே இவர்களை வீடு வீடாகச் சென்று சோதனை மேற்கொள்ள அறிவுறுத்தியிருக்கிறோம், மேலும், சில இடங்களில் கணக்கெடுப்புப் பணியாளர்கள் வீடுகளுக்குச் செல்லாமல் தாங்களாகவே பதிவேடுகளில் குறிப்பெழுதி வருவதாகவும் புகார்கள் வந்துள்ளதால் அவர்களுக்கு இவ்வாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது” என்று கூறினர்.

இது குறித்து கருத்து தெரிவித்த சென்னை மாநகராட்சி ஆணையர் ஜி. பிரகாஷ், “கணக்கெடுப்புப் பணியாளர்கள் தங்கள் பணியை முழு கவனத்துடன் செய்ய வேண்டும் என்பதற்கான ஒரு வழிகாட்டு நெறிமுறையே இந்த இலக்கு”. மேலும், “எங்களது இலக்கு இறப்பு விகிதத்தைக் குறைப்பதில் தான் உள்ளது” என்று கூறினார்.

You may have missed