சென்னை: கொரோனா தொற்று கண்டறியப்பட்ட பகுதிகளில் வாழும் வயதானவர்கள் மற்றும் இதர நோய்களால் அவதிப்படும் நபர்களைக் கண்காணித்து, அவர்களுக்கு விரைவான பரிசோதனை மற்றும் சிகிச்சை அளிக்கும் பணிகளைத் தொடங்கியுள்ளது சென்னை மாநகராட்சி.

இதுதொடர்பாக கூறப்படுவதாவது; வயதானவர்கள் மற்றும் ஏற்கனவே பிற நோய்களால் பாதிக்கப்பட்டிருக்கும் நபர்களை, கொரோனா வைரஸ் விரைவாக தொற்றும் மற்றும் அதன்மூலம் மரணங்களும் அதிகரிக்கும் என்பது மருத்துவத் துறையினரின் கூற்று.

இந்த நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டப் பகுதிகளில், ஒவ்வொரு வீடாக சென்று, வயதானவர்கள் மற்றும் பிற நோய்களால் அவதிப்படுவோரை கண்டறியும் பணி சென்னை மாநகராட்சியால் துவக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அடையாளம் காணப்படும் நபர்கள், 10 நாட்களுக்கு தனிமைப்படுத்தல் இடங்களுக்கு கொண்டு செல்லப்பட்டு, போதுமான கவனிப்புக்கு உட்படுத்தப்படுவார்கள். அவர்கள், நோய் அறிகுறிகளை வெளிப்படுத்தினால் அவர்களுக்கு சரியான காலத்தில் உரிய சிகிச்சை அளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.