சென்னை:

வீட்டில் வளர்க்கப்படும் செல்லப்பிராணிகள் குறித்து ஆன்லைனில் பதிவு செய்யவும், அதற்கான லைசென்ஸ் வாங்கும்  திட்டத்தையும் கட்டாயமாக்க  சென்னை மாநகராட்சி திட்டமிட்டு உள்ளது.

சென்னை போன்ற மாநகரப் பகுதிகளில் செல்லாப்பிராணிகள் வளர்க்கப்படுவது அதிகரித்து வரும் நிலையில், அதற்கான மருத்துவமனைகளும் அதிகரித்து உள்ளது. இதன் காரணமாக, வீட்டில் செல்லப்பிராணிகள் வளர்ப்போர் அதற்கான  உரிமம் வாங்குவது கட்டாயம் என்று சென்னை மாநகராட்சி தெரிவித்து உள்ளது.

அதன்படி, செல்லப்பிராணிகள் வளர்ப்பவர்கள், அதுகுறித்து இணையதளத்தில் பதிய வேண்டும் என்றும், வளர்க்கும் செல்லப்பிராணிகளுக்கு லைசென்ஸ் கட்டணம் ஆண்டுக்கு ரூ.50 செலுத்த வகையிலும், ஆண்டுக்கொரு முறை இதை புதுப்பிக்கும் வகையிலும் திட்டத்தை செயல்படுத்த சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது.

ஆன்லைன் மூலம் பதிவு செய்யலாம் அல்லது அருகில் உள்ள கால்நடை மருத்துவமனைக்கு சென்று அங்கு வழங்கப்படும் படிவங்களில் செல்லப்பிராணிகள் பெயர், நிறம், இனம், வயது, உரிமையாளரின் பெயர் மற்றும் முகவரி, நோய்த்தடுப்பு வரலாறு, தடுப்பூசிகள் மற்றும் பிற நோய்கள் பற்றிய தகவல்களை பதிவு செய்ய வேண்டும் என்றும் என்று கூறப்படுகிறது.

சில வருடங்களுக்கு முன்பு செல்லப்பிராணிகள் வளர்ப்பு நாய்கள் போன்றவை பதிவு செய்வது கட்டாயமாக இருந்த நிலையில், இடையில் அதில் தொய்வு ஏற்பட்டுள்ளதாகவும், இந்த ஆண்டு இதுவரை 800 செல்லப்பிராணிகளை மட்டுமே பதிவு செய்துள்ள நிலையில், செல்லப் பிராணிகள் குறித்து பதிவு செய்யவதை கட்டாயமாக்க சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது.