சென்னை:

கொரோனா தொற்று தமிழகத்தில் வீரியமாக பரவி வரும் நிலையில், மாநில அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி உள்ளது.

இதற்கிடையில் பொதுமக்களுக்கு தேவையான முகக்கவசங்கள் கிடைப்பதில் தட்டுப்பாடு நிலவி வருவதால், சென்னையில் உள்ள  ஐந்து பெண்கள் காப்பங்களில் வசிப்பவர்கள் மூலம் முகக்கவசம் தயாரிக்கும் பணி நடைபெற்று வருகிறது.

கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி உள்ள சென்னை கார்ப்பரேசன், வீடட்டவர்களுக்கு,  கொரோனா தொற்று பரவலை தடுக்கும் நோக்கில் பல்வேறு உதவிகளை செய்து வருகிறது. மேலும் பாதுகாப்பு கருதி இலவசமாக முகக்கவசங்களையும் வழங்கி வருகிறது.

சென்னை மாநகராட்சி மூலம் சென்னை மற்றும் அதன் சுற்றுப்பகுதிகளில் 51 இரவு தங்குமிடங்கள் உள்ளன. இதில் 8 தங்குமிடங்கள் பெண்களுக்குரியது.  இதில் தங்குமிடங்களில் வசிப்பவர்களுக்கு ஏற்கனவே  தையல் பயிற்சி வழங்கப்பட்டு உள்ளது. தற்போது அவர்கள் மூலம் முகக்கசம் தயாரிக்கும் பணியை சென்னை மாநகராட்சி தீவிரப்படுத்தி உள்ளது.

கடந்த சில நாட்களாக இந்த பணிகளில் ஈடுபடும் பெண்கள் இதுவரை 3 ஆயிரம்  முகமூடிகளை தைத்து கொடுத்துள்ளதாகவும், அவைகள் சென்னையில் உள்ள  தங்குமிடங்கள் மற்றும் சமூக அரங்குகளில் தங்க வைக்கப்பட்டுள்ள 4000 வீடற்ற நபர்களுக்கு விநியோகிக்கப்பட உள்ளதாக மாநகர ஆணையாளர் தெரிவித்து உள்ளார்.