சென்னை: சென்னையில் ஜூலை மாதத்தில் கொரோனா பாதிப்பு படிப்படியாக குறைந்து வருவதாக சென்னை மாநகராட்சி தகவல் தெரிவித்துள்ளது.
சென்னையில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந் நிலையில் ஜூன் மாத தொடக்கம் முதல் நாள் தோறும் கொரோனா பாதிப்பு புதிய உச்சத்தை தொட்டது. ஜூன் மாத இறுதியில் நாளொன்றுக்கு சென்னையில் கொரோனா பாதிப்பு 2000 தாண்டி பதிவானது. ஜூன் 30ம் தேதி அதிகபட்சமாக 2393 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
சென்னையில் 7 நாட்களாக அதாவது ஜூலை மாதத்தில் இருந்து கொரோனா தொற்று படிப்படியாக குறைந்து வருகிறது. சென்னையில் ஜூன் 30ம் தேதி 2393 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இந் நிலையில் ஜூலை 1ம் தேதி பாதிப்பு குறைந்து 2182 பேராக உறுதி செய்யப்பட்டது.ஜூலை 2ம் தேதி  2027 பேருக்கும், ஜூலை 3ம்  தேதி பாதிப்பு சற்று அதிகரித்து 2082 பேருக்கும் உறுதி செய்யப்பட்டது.

தொடர்ந்து ஜுலை 4ல் பாதிப்பு குறைந்துஇ 1842 ஆக குறைந்தது. தினசரி 10 ஆயிரம் பேருக்கு சோதனை நடத்தப்பட்டு இருக்கிறது. ஜூலை 5-ம் தேதி பாதிப்பு  1713, ஜூலை  6ம் தேதி சற்று அதிகரித்து 1747 ஆகவும் இருந்த பாதிப்பு, ஜூலை 7-ம் தேதியான நேற்றைய தினம் 1203 ஆக குறைந்துள்ளது. அதாவது, கடந்த வாரம் பாதிப்பு சதவீதம் 20 சதவீதம் இருந்த நிலை மாறி, நேற்று பாதிப்பு 11 சதவீதம் என்று பதிவிடப்பட்டுள்ளது.