சென்னை திமுக வட்டச் செயலாளர் கொரோனாவுக்குப் பலி…

--

சென்னை:

சென்னை பல்லாவரம் 37 வது வார்டு திமுக வட்டச் செயலாளர் எபனேசர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

சென்னையில் கொரோனா தொற்று தீவிரமடைந்து வருகிறது. இதுவரை 47,735 பேர் தொற்று பாதிப்பில் இருந்து மீண்டு வீடு திரும்பியுள்ள நிலையில், 22,374  பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1120-ஆக உயர்ந்துள்ளது.

இந்த நிலையில்,  சென்னை பல்லாவரம் 37வது வார்டு திமுக வட்டச் செயலாளர் எபனேசர் (வயது 34)  கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில் குரோம்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

எபனேசர் கொரோனா ஊரடங்கு காலத்தில், தனது வார்டு மக்களுக்கு நிவாரணப் பொருள்கள் வழங்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

ஏற்கனவே  திமுக எம்எல்ஏ ஜெ.அன்பழகன் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, குரோம்பேட்டை தனியார் மருத்துவ மனையில்   சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.