மும்பை: கொல்கத்தாவின் பின்கள பேட்ஸ்மென்கள் மூவர், சென்னை அணியின் பந்துவீச்சை அடித்து நொறுக்கிய நிலையில், தீபக் சஹாரின் பிரமாதமான அடுத்தடுத்த 2 ரன்அவுட்களின் மூலம் சென்னை அணி, 18 ரன்களில் வெற்றிபெற்றது.

முதலில் ஆடிய சென்ன‍ை, 221 ரன்களை, கொல்கத்தாவிற்கு இலக்காக நிர்ணயித்தது. பின்னர், கடின இலக்க‍ை விரட்டிய கொல்கத்தா அணியின் முதல் 5 வீரர்கள் ஒற்றை இலக்கத்தில் காலியானார்கள். ஷப்மன் கில் டக்அவுட்.

ஆனால், 6, 7, 8ம் நிலைகளில் ஆடிய தினேஷ் கார்த்திக்(24 பந்துகளில் 40 ரன்கள்), ஆண்ட்ரே ரஸ்ஸல்(22 பந்துகளில் 54 ரன்கள்), பேட் கம்மின்ஸ்(34 பந்துகளில் 66 ரன்கள் -நாட்அவுட்) அடித்து, சென்னையை பெரியளவில் மிரட்டிவிட்டனர்.

கொல்கத்தா அணி வென்றுவிடும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தீபக் சஹார், வருண் சக்ரவர்த்தி மற்றும் பிரசித் கிருஷ்ணா ஆகியோரின் விக்கெட்டுகளை ரன்அவுட் மூலம் பறித்தார்.

மேலும், தீபக், ஏற்கனவே 4 விக்கெட்டுகளையும் கைப்பற்றியிருந்தார். ஆகமொத்தம், அவர் கணக்கில் இன்று 6 விக்கெட்டுகள். சென்னை அணியில், சாம் கர்ரனும், ஷர்துல் தாகுரும் அதிக ரன்களை வாரி வழங்கினர். இன்றையப் போட்டியில், மொயின் அலிக்கு 1 ஓவர்கூட கொடுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

கொல்கத்தாவின் பேட் கம்மின்ஸ், இன்று பந்துவீசியபோது, ரன்களை வாரி வழங்கியிருந்தார். அதற்கான பதில் பரிகாரமாக, பேட்டிங்கில், சென்னையை ஒரு கை பார்த்துவிட்டார்.