மோசமான வானிலை: தொடர் மழை காரணமாக சென்னை விமானங்கள் தாமதம்

சென்னை:

தொடர் மழை  காரணமாக சென்னையில் மோசமான வானிலை நிலவி வருவதால், சென்னைக்கு வரும் மற்றும் புறப்படும் விமானங்கள் தாமதமாக செல்கின்றன.

சென்னையில் கடந்த 2 நாட்களாக விட்டுவிட்டு பலத்த மழை பெய்து வருகிறது. நேற்று இரவு முதல் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக சாலைகளில் தண்ணீர் தேங்கி உள்ளது. வானம் முழுவதும் மேகங் களால் சூழப்பட்டு குளிர்ச்சியான சூழ்நிலை நிலவி வருகிறது.

இதையடுத்து, மோசமான வானிலை காரணமாக சென்னை விமான நிலையத்திற்கு வரும்  பல விமானங்கள் பல மணி நேரம்  தாமதமாக வந்து கொண்டிருக்கின்றன. அதேபோல், இங்கிருந்து கிளம்ப வேண்டிய விமானங்களும் குறைந்தது ஒரு மணி நேரத் தாமதத்துடனே புறப்பட்டுச் செல்கின்றன.

அரபிக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி இருப்பதால் தமிழகம் மற்றும் கேரளாவுக்கு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.  தமிழகத்திலும் 7ந்தேதி ரெட் அலர்ட் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் நேற்று நள்ளிரவு முதல் தற்போதுவரை மிதமான மழை பெய்து வருவது குறிப்பிடத்தக்கது.