சென்னை வெள்ளம்: சிஎம்டிஏவின் முகத்திரையை கிழித்த தணிக்கைத்துறை அறிக்கை

சென்னை:

சென்னையில் ஏற்பட்ட வரலாறு காணாத வெள்ளம் மற்றும் அதனால் ஏற்பட்ட இழப்புகளுக்கு சிஎம்டிஏவே (சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம்)  காரணம் என்று மத்திய தணிக்கைத்துறை அறிக்கையில் பகிரங்கமாக குற்றச்சாட்டுக்களை கூறி உள்ளது.

• மாஸ்டர் பிளான், ஐந்து ஆண்டுக்கு ஒருமுறை சீராய்வு செய்யப்படவில்லை

 • சி.எம்.டி.ஏ.,வின் தவறான அணுகுமுறையால் நீர்நிலை பகுதிகளில் கட்டிடங்கள்

• நகர்புற வளர்ச்சி குறித்து தெரியாத அதிகாரிகள்

• வெள்ளத்தடுப்பு பணிகள் நடைபெறவில்லை

சிஎம்டிஏவின் தவறான அணுகுமுறை காரணமாக சுமார் நீர் நிலைகள்  அமைந்திருந்த 2389 ஏக்கர்  உள்ள இடங்கள் பாழாக்கப்பட்டிருப்பதாகவும், அந்த பகுதிகள் அனைத்தும் கட்டிடங்க ளாக உருமாறி உள்ளதாகவும் சிஏஜி அறிக்கையில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

சென்னையில் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளின்  வளர்ச்சி பணிகள் மற்றும் நிலத்தின் பயன்பாடு குறித்து, கட்டிங்கள் கட்டுவதில் விதிமுறை, ஆக்கிரமிப்பு போன்ற பணிகளை சிஎம்டிஏ கண்காணித்து வருகிறது.

ஆனால், சி.எம்.டி.ஏ.வின் தவறான அணுகுமுறை மற்றும் ஊழல் முறைகேடு போன்றவற்றால், கடந்த, 37 ஆண்டுகளில், 2,389 ஏக்கர் ஏரி, குளங்கள், வாய்க்கால்கள் அழிக்கப்பட்டு, அந்த இடங்கள் முழுவதும்  கட்டுமான பகுதிகளாக மாற்றம் செய்யப்பட்டு இருப்பதாக சிஏஜி அறிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

சிஎம்டிஏவின் இதுபோன்ற பொறுப்பற்ற செயல்கள் காரணமாகவே கடந்த 2015ம் ஆண்டு சென்னையில் கடுமையான வெள்ளப்பாதிப்பு ஏற்பட்டது என்றும் குற்றம்சாட்டி உள்ளது.

மேலும், சென்னையின் வளர்ச்சியை கருத்தில் கொண்டு கடந்த 1976ம் ஆண்டு முதலாவது வது  ‘மாஸ்டர் பிளான்’ அறிவிக்கப்பட்டது. இது அரசின் கொள்கை முடிவாக அறிவிக்கப்பட்ட தால், இதில் நீதிமன்றம் தலையிட முடியாது.

இந்த நிலையில் முதலாவது மாஸ்டர் பிளான் கடந்த , 1996ல் முடிவடைந்தது. அதைத்தொடர்ந்து 2வது மாஸ்டர் பிளான் 2008ம் ஆண்டு அமலுக்கு கொண்டு வரப்பட்டது.

மாஸ்டர் பிளானின் தெரிவிக்கப்பட்டுள்ள ஷரத்தின்படி, நில பயன்பாடு குறித்தும்,  நகர் விரிவாக்கம்,  ஊரமைப்பு சட்டப்படி அரசு ஒப்புதல் அளித்து வருகிறது.

ஆனால், இந்த மாஸ்டர் பிளான் குறித்து 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை சீராய்வு செய்யப்பட வேண்டும். ஆனால், சிஎம்டிஏ ‘ ஒருமுறைகூட சீராய்வு செய்யவில்லை. அதற்கான நடவடிக்கையில் கூட இறங்கவில்லை.

ஆனால், அரசின் கொள்கை முடிவான மாஸ்டர் பிளானில் அறிவிக்கப்பட்டிருந்த , நில பயன்பாட்டு வரையறைகளை, சி.எம்.டி.ஏ., அதிகாரிகள் தவறான வகையில் மாற்றி உள்ளனர்.

இதற்கு  பொதுப்பணித்துறை, சில நிபந்தனைகள் விதித்து, தடையின்மை சான்று வழங்கியுள்ளது.

பொதுப்பணித்துறையின்  நிபந்தனைகளை, சம்பந்தப்பட்ட விண்ணப்பதாரர் நிறைவேற்றி னாரா என்பதை கண்காணிப்பதற்கான பொறுப்பை சிஎம்டிஏவோ, பொதுப்பணித்துறையோ, ஏற்கவில்லை என்றும் தெரிவித்து உள்ளது.

வெள்ள பாதிப்பு தடுப்பு, நீர் நிலை பாதுகாப்பு போன்ற அடிப்படை கூறுகளை ஆராயாமல், 1979க்கும், 2016க்கும் இடைபட்ட, 37 ஆண்டுகளில், சென்னை பெருநகர் பகுதியில், 2,389 ஏக்கர் நீர் நிலை பகுதிகள், கட்டுமான பகுதிகளாக மாறியுள்ளன.

 சி.எம்.டி.ஏ.,வின் தவறான அணுகுமுறை காரணமாகவே, சென்னையை சுற்றி உள்ள நீர் நிலைகள் அழிக்கப்பட்டு, அந்த பகுதிகளில், அதிக அளவில் கட்டுமான திட்டங்கள் வந்துள்ளன.  இதுவே, 2015ல், சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரத்தை சேர்ந்த பெரும்பாலான பகுதிகள், வெள்ளத்தில் மிதக்க அடிப்படை காரணமாக அமைந்தது.

திட்டமிட்ட நகர்ப்புற மயமாதலை உறுதி செய்வதில், சி.எம்.டி.ஏ.,வுக்கு உள்ளார்ந்த அக்கறை இல்லை.

நீர் நிலைகள் பாதுகாப்பையும் உள்ளடக்கியதே, நகர்ப்புற வளர்ச்சி என்பது கூட தெரியாத அதிகாரிகளை வைத்து, சி.எம்.டி.ஏ.,வை நடத்துவது, சென்னைக்கு மேலும் பெரிய ஆபத்துகளையே ஏற்படுத்தும்.

சி.எம்.டி.ஏ.,வின் ஒட்டுமொத்த செயல்பாடுகளையும், அதிகாரிகளின் பணித் திறனையும் ஆராய்ந்து, உரிய மாறுதல்களை, அரசு மேற்கொள்ள வேண்டும்.

தணிக்கை துறையின் இந்த அதிரடி குற்றச்சாட்டு, சி.எம்.டி.ஏ.அதிகாரிகளின் முகத்திரையை கிழித்துள்ளது. சிஎம்டிஏ அதிகாரிகளுக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளது.

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள சமூக ஆர்வலர்கள், மத்திய கணக்குத்துறையின் இந்த  பகிரங்க குற்றச்சாட்டுக்கு பிறகாவது, சி.எம்.டி.ஏ.,வின் அணுகுமுறை மாற வேண்டும் என்றும், ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ள மாஸ்டர் பிளானில், வெள்ள தடுப்புக்கான செயல்திட்டத்தை முறையாக வகுத்து, அதற்கு ஏற்ப வளர்ச்சி விதிகளை மாற்றி அமைப்பது அவசியம்.

மாஸ்டர் பிளானில் உள்ள பரிந்துரைகள்படி,  சட்டத்திற்கு முரணாக மனைப்பிரிவுகளை அனுமதிப்பது, கட்டுமான திட்டங்களை அனுமதிப்பது போன்ற செயல்பாடுகளை, சி.எம்.டி.ஏ. நிறுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தி உள்ளனர்.

மொத்தத்தில் சென்னையின் பேரழிவுக்கு சிஎம்டிஏதான் காரணம் என்று சிஏஜி தனது அறிக்கையில் பட்டவர்த்தனமாக தெரிவித்து உள்ளது.