சென்னை சிறுமி பாலியல் வன்கொடுமை:17பேரின் நீதிமன்ற காவல் நீட்டிப்பு

--

சென்னை:

யனாவரத்தை சேர்ந்த 11 வயது  மாற்றுத்திறனாளி சிறுமியை, அவர் குடியிருந்த அடுக்குமாடி குடியிருப்பில் பணிபுரிந்து வந்த செக்யூரிட்டி உள்பட 17 பேர் பாலியல் பலாத்காரம் செய்து வந்துள்ளனர்.

இது தொடர்பாக புகாரில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள 17 பேரின் நீதிமன்ற காவலை ஆகஸ்டு மாதம் 10 வரை மகளிர் நீதிமன்றம் நீட்டித்துள்ளது.

சென்னை அயானவரம் பகுதியில் பழைய சயானி தியேட்டர் அருகே அமைந்துள்ள உயர்தர அடுக்குமாடி குடியிருப்பில் சுமார் 300க்கும் அதிகமான குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த குடியிருப்பில் வசித்து வந்த மாற்றுத்திறனாளி சிறுமியை அடுக்குமாடி குடியிருப்பின் காவலாளிகள், லிப்ட் ஆபரேட் டர், தண்ணீர் கேன் போடுபவர், பிளம்பர், எலக்ட்ரீசியன் உள்பட 17 பேர் கடந்த 6 மாதங்களுக்கு மேலாக பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.

இதுதொடர்பாக அந்த சிறுமியின் பெற்றோர் காவல்துறையில் புகார் கூறியதை தொடர்ந்து, இந்த வன்கொடுமை செயலில் ஈடுபட்டதாக 17 பேரை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்த வழக்கு தொடர்பாக கைது செய்யபட்ட 17 பேரையும் சென்னை மகளிர் நீதிமன்ற நீதிபதி மஞ்சுளா ஜூலை 31 வரை நீதிமன்றக்காவலில் வைக்க உத்தரவிட்டார். இதையடுத்து, அவர்களை 5 நாள் விசாரணைக்காக போலீஸ் காவலுக்கு அனுமதி அளித்திருந்தார்.

இந்த நிலையில்,  இன்றுடன் 5 நாள் போலீஸ் காவல் முடிவடைந்ததை தொடர்ந்து, குற்றம் சாட்டப்பட்ட 17 பேரும்  சென்னை மகளிர் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்பட்டனர்.

இதையடுத்து, அவர்கள் 17 பேரையும் ஆகஸ்ட் 10ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்கும்படி நீதிபதி உத்தரவிட்டார்.