சென்னை

ஃபோர்ப்ஸ் பத்திரிகை  சமீபத்தில் வெளியிட்டுள்ள 30 வயதுக்கு குறைந்த 30 சாதனையாளர்கள் பட்டியலில் சென்னையை சேர்ந்த அட்சயா சண்முகம் இடம் பெற்றுள்ளார்.

அட்சயா சண்முகம் (வயது 29) ஒரு பன்னாட்டு நிறுவனத்தில் பணி புரிந்து வருகிறார்.  இவர் புகைபிடிப்பதை நிறுத்த ஒரு மென்பொருள் கண்டுபிடித்துள்ளார்.  அதன் மூலம் புகை பிடிப்பவர்கள் அந்தப் பழக்கத்தை முழுமையாக நிறுத்த முடியும் என அட்சயா கூறுகிறார்.

இந்த சாஃப்ட்வேர் ஒரு வாட்ச் போன்ற கருவியில் பொருத்தப்பட்டு கைகளில் அணிந்துக் கொண்டால் அது அவர்களைக் கண்காணித்து அவர்களை புகை பிடிக்க வேண்டாம் என தகவல்கள் அனுப்பும் எனவும் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர், “எங்களது சாஃப்ட்வேர் புகைக்கு அடிமையானோரின் நடவடிக்கைகளையும், அடிமையாகும் நிலையில் உள்ளோரின் நடவடிக்கைகளையும் கண்காணித்த பின் உருவாக்கப் பட்டது.  இந்த சாஃப்ட்வேர் அவர்களுக்கு புகை பிடிக்கும் எண்ணம் வருவதை கண்டறிந்து புகைபிடிக்காமல் இருக்க யோசனைகளை தெரிவிக்கும்.

இதுவரை நடைபெற்ற பரிசோதனைகளில் 95% வெற்றி அடைந்துள்ளோம்.  நாங்கள் கார்ப்பரேட் நிறுவனங்களுடன் இணைந்து அவர்களின் ஊழியர்களுக்கு இந்த நல்ல திட்டத்தை செயல்படுத்த திட்டமிட்டுள்ளோம்” எனக் கூறி உள்ளார்.

அட்சயா சண்முகம் சென்னை அண்ணா யுனிவர்சிடியில் எலெக்ட்ரிகல் எஞ்சினியரிங்கில் பி ஈ பட்டமும்  பட்டமேற் படிப்பையும் பி எச் டிஐயும் அமெரிக்காவில் முடித்துள்ளார்.  அவருடைய இந்த கண்டுபிடிப்புக்கு அவர் பணி புரியும் நிறுவனம் நிதி உதவி அளித்துள்ளது.

ஃபோர்ப்ஸ் பத்திரிகை வருடா வருடம் 30க்குள் உள்ள 30 பேர் என்னும் சாதனை பட்டியலை வெளியிடுவது வழக்கம்.  அதில் 30 வயதுக்குட்பட்ட 30 சாதனையாளர்களின் பெயர் இடம் பெறும்.  கடந்த செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள பட்டியிலில் அட்சயா சண்முகத்தின் பெயரும் இடம் பெற்றுள்ளது.