சென்னை

தொலைக்காட்சி சேனல்களுக்கு டிராய் கொண்டு வந்துள்ள கட்டண விதிகள் செல்லும் என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.

டிராய் என அழைக்கப்படும் மத்திய தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் தொலைக்காட்சி நிறுவனங்கள் பொதுமக்களுக்கு 100 சேனல்களை ரூ.130 க்கு வழங்க வேண்டும் என விதிகளை உண்டாக்கி ஆணை இட்டிருந்தது.   கடந்த மார்ச் மாதம் 3 ஆம் தேதி உச்சநீதிமன்ற உத்தரவுப்படி இந்த ஆணையை டிராய் வெளியிட்டிருந்தது.   இதற்கு பல தனியார் தொலைக்காட்சி நிறுவனங்கள் எதிர்ப்பு தெரிவித்தன.

விஜய் டெலிவிஷன் நெட் ஒர்க் மற்றும் ஸ்டார் இந்தியா நிறுவனம் உள்ளிட்ட தொலைக்காட்சி நிறுவனங்கள் இந்த ஆணையை எதிர்த்து தனித்தனியாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தன.   இந்த வழக்கை நீதிபதிகள் இந்திரா பானர்ஜி மற்றும் சுந்தர் ஆகியோர் விசாரித்து வந்தனர்.   கடந்த மார்ச் மாதம் இந்த வழ்க்கில் தீர்ப்பு வழங்கப்பட்டது.

இந்த தீர்ப்பில் டிராய் கொண்டு வந்துள்ள விதிகள் செல்லும் என இந்திரா பானர்ஜி தீர்ப்பளித்தார்.  மற்றொரு நீதிபதியான சுந்தர் இவ்வாறு விதிகளை உருவாக்கி ஆணையைட டிராய்க்கு அதிகாரம் இல்லை என தீர்ப்பளித்தார்.   இதனால் இந்த வழக்கு மூன்றாவது நீதிபதியான சுந்தரேஷால் விசாரிக்கப்பட்டது.

மூன்றாவது நீதிபதியான சுந்தரேஷ், “தொலைக்காட்சி நிறுவனங்களுக்கான கட்டணங்களை கட்டுப்படுத்த டிராய்க்கு அதிகாரம் உள்ளது.   அதனால் டிராய் கொண்டு வந்த புதிய விதிகள் அடங்கிய ஆணை செல்லும்.    இவ்வழக்கில் இந்திரா பானர்ஜி அளித்த தீர்ப்பை ஏற்றுக் கொண்டு அந்த தீர்ப்பை உறுதி செய்கிறேன்” என தீர்ப்பு அளித்துள்ளார்.