நெடுஞ்சாலை டெண்டர் முறைகேடு : தமிழக முதல்வர் மீது ஏன் வழக்கில்லை : உயர்நீதிமன்ற நீதிபதி

சென்னை

நெடுஞ்சாலை துறை ஒப்பந்த முறைகேடு புகார் குறித்து தமிழக முதல்வர் மீது ஏன் வழக்கு பதிவு செய்யவில்லை என சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கேட்டுள்ளார்.

திமுக அமைப்பு செயலாளர் ஆர் எஸ் பாரதி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார்.   அதில், “நெடுஞ்சாலை துறை அமைச்சராக எடப்பாடி பழனிச்சாமி கடந்த 2011 முதல் 2016 வரை பதவி வகித்தார்.   அப்போது தனக்கு நெருங்கிய உறவினர்களான சந்திரகாந்த் ராமலிங்கம்,  நாகராஜன், செய்யாத்துறை, சேகர் ரெட்டி ஆகியொருக்கு வழங்கி உள்ளார்.

அத்துடன் அவரது நெருங்கிய உறவினர்களுக்கு பல கோடி ரூபாய் மதிப்புள்ள ஒப்பந்தங்கள் அளிக்கப்பட்டுள்ளன.  இதில் ஊழல் நடந்துள்ளதால் ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும் என ஊழல் தடுப்பு பிரிவுக்கு புகார் அனுப்பியும் நடவடிக்கை இல்லை.  உடனடியாக அவர் மேல் நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்” என கூறப்பட்டிருந்தது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜெகதீஷ் சந்திரா இந்த புகார் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என லஞ்ச ஒழிப்புத்துறையிடம் கேட்டார்.  அதற்கு கடந்த ஜூன் 22 ஆம் தேதி விசாரணை தொடங்கியதாக பதில் அளிக்கப்பட்டது.   உடனே நீதிபதி அப்படியானால் முதல்வர் மீது ஏன் வழக்கு பதிவு செய்யவில்லை என கேட்டார். இது குறித்து உடனடியாக பதில் அளிக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.