மெரினா முதல் இசிஆர் வரை புதிய சாலை அமைக்க முடியுமா? : உயர்நீதிமன்றம் கேள்வி

சென்னை

சென்னை மெரினா கடற்கரை முதல் கிழக்கு கடற்கரைச் சாலையை இணைக்க புதிய சாலை அமைக்க முடியுமா என மாநகராட்சியை சென்னை உயர்நீதிமன்றம் கேட்டுள்ளது.

சென்னை நகரில் நாளுக்கு நாள் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து வருவது தெரிந்ததே.   அதிலும் மெரினா கடற்கரையில் இருந்து அடையாறு திருவான்மியூர் பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் சாதாரண நேரங்களிலேயே காணப்படுவது வழக்கமாக உள்ளது.   இதையொட்டி சுமார் 10 வருடங்களுக்கு முன்பு இது குறித்து திட்டம் தீட்டப்பட்டது.

கடந்த 2011 ஆம் வருடச் சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக இதைத் தனது தேர்தல் அறிக்கையில் தெரிவித்திருந்தது.  ஆனால்  ஆட்சிக்கு வந்த பிறகு இதை அக்கட்சி கவனத்தில் கொள்ளவில்லை.   அந்த திட்டத்தின்படி சாந்தோம் நெடுஞ்சாலையில் இருந்து கொட்டிவாக்கம் கிழக்கு கடற்கரைச் சாலை வரை சாலை அமைக்கப்பட இருந்தது.

தற்போது சென்னை உயர்நீதிமன்றம்  மெரினா கடற்கரையில் இருந்து கொட்டிவாக்கம் வரை கடற்கரை ஓரமாகச் சாலை ஒன்றை அமைக்க முடியுமா என மாநாகரட்சியை கேட்டுள்ளது.   மேலும் இந்த சாலை அமைப்பது சாத்தியமானால் அதை போரூர், எண்ணூர், பேசின் பாலம் வழியாக வட்டப்பாதையாக அமைக்க முடியுமா எனவும் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.

இது குறித்து ஓய்வு பெற்ற அதிகாரி ஒருவர், “உயர்நீதிமன்றம் யோசனை தெரிவித்துள்ள இந்த 6-7 கிமீ தூரமுள்ள சாலையை ரூ.1200 கோடி செலவில் 2 வருடங்களில் அமைக்க முடியும்.  ஆனால் இதற்கு அரசின் பல துறைகளின் அனுமதி பெற வேண்டும்.   இதைப் போல் சாலைகள் மும்பை மற்றும் கொல்கத்தா நகரங்களில் அமைக்கப்பட்டுள்ளன” எனத் தெரிவித்துள்ளார்.