சென்னை

திமுகவின் அமைப்புச் செயலர் ஆர் எஸ் பாரதி மீதான அவதூறு வழக்கு விசாரணைக்கு சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

கடந்த 2015 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் சென்னை வேளச்சேரியில் நடந்த ஒரு பொதுக் கூட்டத்தில் திமுக அமைப்புச் செயலாளர் ஆர் எஸ் பாரதி கலந்துக் கொண்டார்.   அவர் தனது உரையில் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவை அவதூறாகப் பேசியதாக அவர் மீது வழக்கு தொடரப்பட்டது.  சென்னையில் உள்ள நாடாளுமன்ற மற்றும் சட்டப்பேரவை உறுப்பினர்கள் மீதான வழக்கை விசாரிக்கும் நீதிமன்றம் இந்த வழக்கை விசாரித்து வருகிறது.

இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆர் எஸ் பாரதி மனுத் தாக்கல் செய்தார்.   இந்த மனுவின் மீதான விசாரணையில் முதல்வர் செய்ய வேண்டிய மக்கள் குறித்தே தாம் பேசியதாகவும் தனிப்பட்ட முறையில் விமர்சிக்கவில்லை எனவும் பாரதி தரப்பில் தெரிவிக்கப்பட்டது.  மேலும் ஜனநாயக ரீதியாக முதல்வரின் பணிகள் குறித்து விமர்சிக்க உரிமை உள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டது.

இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் இந்த மனு மீண்டும் விசாரணைக்கு வந்தது.  அப்போது  இந்த வழக்கு விசாரணையில் ஆர் எஸ் பாரதி நேரில் ஆஜராவதில்  இருந்து விலக்கு அளிக்கப்பட்டு விசாரணைக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.  வரும் 15 ஆம் தேதிக்குள் ஆர் எஸ் பாரதியின் மனுவுக்குத் தமிழக அரசு பதில் அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.