டில்லி:

சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக உள்ள வி.கே தஹில்ரமணி மேகாலயா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக மாற்றப்பட்டுள்ள நிலையில், அவர் தனது நியமனத்தை மறுபரிசீலனை செய்யுமாறு உச்சநீதி மன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான கொலிஜியம் அமைப்புக்கு வேண்டுகோள் விடுத்து கடிதம் எழுதியிருந்தார்.

ஆனால், அவரது வேண்டுகோளை ஏற்க உச்சநீதி மன்ற கொலிஜியம் மறுத்து விட்டது. இதன் காரணமாக தஹில்ரமணி மேகாலய மாநில உயர்நீதி மன்ற தலைமை நீதிபதியாக பொறுப்பேற்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டு உள்ளது.

சென்னை உயர்நீதி மன்றத்தின் தலைமைநீதியாக கடந்த ஆண்டு (2018) ஆகஸ்டு மாதம்12ந்தேதி தஹில்ரமணி பதவி ஏற்றார். சுகுமார் ஓராண்டு காலம் மட்டுமே அவர் பணியாற்றிய உள்ள நிலையில், தற்போது அவர் மேகாலயா மாநிலத்துக்கு மாற்றப்பட்டு உள்ளார்.

பொதுவாக  மூத்த நீதிபதிகள் மற்றும் சென்னை போன்ற பெரிய உயர்நீதி மன்றத்தின் தலைமை நீதிபதி பொறுப்பில் உள்ளவர்கள், சிறிய மாநிலங்களுக்கு மாற்றப்படுவது இல்லை. ஆனால், தஹில் ரமணி மேகாலய மாநிலத்துக்கு மாற்றப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

மேகாலயா மாநிலத்தின் உயர்நீதி மன்றத்தின் மொத்த நீதிபதிகளின் எண்ணிக்கையே 3 மட்டும் தான். ஆனால் சென்னை உயர்நீதி மன்றத்தின் மொத்த நீதிபதிகளின் எண்ணிக்கை 75. இவ்வளவு பெயரி நீதிமன்றத்தின் தலைமை பொறுப்பில் இருந்து, இந்தியாவின் மிக மூத்த நீதிபதிகளில் ஒருவரான  தஹில் ரமணியை  சிறிய நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தனது பணி மாற்றத்தை மறுபரிசீலனை செய்யுமாறு கடந்த 2ந்தேதி கொலிஜியத்திற்கு தஹில் ரமணி கடிதம் எழுதியிருந்த நிலையில், அதை கொலிஜியம் நிராகரித்து, மேகாலயா மாநிலத்துக்கு செல்லுமாறு அறிவுறுத்தி உள்ளது.

நாட்டிலுள்ள இரண்டு உயர் நீதிமன்றப் பெண் தலைமை நீதிபதிகளில்  ஒருவர் தஹில் ரமணி, மற்றொருவர் ஜம்மு காஷ்மீர் உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதியாக உள்ள கீதா மிட்டல்.