சென்னை

மூன்று தலித் ஏழை இளைஞர்களுக்கு சட்ட உதவி கிடைக்காததால் மரண தண்டனை அளிக்கப்பட்டுள்ளதற்கு சென்னை உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.

தேனி பகுதியில் கடந்த 2014 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 1 ஆம் தேதி ஒரு பெண் குழந்தை காணாமல் போனது.  அடுத்த நாள் அந்த குழந்தையின் சடலம் கிடைத்தது.   மருத்துவ பரிசோதனையில் அந்த குழந்தை பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்டது தெரிய வந்தது.   அதை ஒட்டி மூவர் டிசம்பர் மாதம் 4 ஆம் தேதி கைது செய்யப்பட்டு வழக்கு தொடரப்பட்டது.

அந்த வழக்கில் 2018 ஆம் ஆண்டு மூவருக்கும் உள்ளூர் நீதிமன்றம் மரண தண்டனை வழங்கப்பட்டது.    அந்த மூவரில் இருவர் தீர்ப்பை எதிர்த்து மூவரில் இருவர் மேல்முறையீடு செய்தனர்.   மூன்றாவது நபரான குமரேசன் என்பவர் மேல்முறையீடு செய்ய மறுத்து விட்டார்.    இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் பிரகாஷ் மற்றும் புகழேந்தி ஆகியோரின் அமர்வு  குமரேசனிடமும் விசாரணை நடத்தியது.

விசாரணையில் குமரேசன் தாங்கள் மிகவும் ஏழைகள் என்பதால் சட்ட உதவி கோர முடியவில்லை எனவும் தற்போது மேல் முறையீடு செய்யும் போது மேலும் செலவாகும் என்பதால் மரண தண்டனையை ஏற்றுக் கொள்வதாகவும் தெரிவித்தார்.   அத்துடன் தாம் ஏழை என்பதால் மரண தண்டனை என்னும் விதியின் கட்டளையை ஏற்றுக் கொள்வதாகவும் தெரிவித்தர்.

ஆயினும் அவரையும் மேல் முறையீட்டு மனுவில் சேர்த்துக்கொண்ட உயர்நிதிமன்ற அமர்வு இந்த வழக்கில் அளித்த தீர்ப்பில், “இந்த பலாத்காரம் மற்றும் கொலை வழக்கில் குற்றம்  சாட்டப்பட்டவர்கள் போதிய சட்ட உதவி கிடைக்காமல் இருந்துள்ளனர்.   அதற்கு முக்கியமான காரணம் அவர்கள் ஏழை என்பதால் ஒரு நல்ல வழக்கறிஞரை அமர்த்த முடியாததாகும்.

பார் கவுன்சில் இனியாவது ஏழை மக்களுக்கும் தரமான சட்ட உதவி கிடைக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்ளப்படுகிறது.    இப்போது மேல் முறையிட்டின் போது வழக்கறிஞர்கள் வைத்த வாதத்தின் படி இந்த வழக்கின் விசாரணை சரியாக நடைபெறவில்லை என்பது தெரிய வந்துள்ளது.

அது மட்டுமின்றி குமரேசன் என்னும் குற்றம் சாட்டப்பட்டவருக்கு வழக்கறிஞரை நியமிக்கவும் பணம் இல்லாமல் இருந்துள்ளார்.    இது முழுக்க முழுக்க ஏழைகள் என்பதால் சட்ட உதவி கிடைக்கவில்லை என்பதற்கு உதாரணமாகும்.   மேலும் தம்மிடம் பணம் இல்லாததால் குமரேசன் மேல் முறையிடு செய்யாமல் இருந்துள்ளார்.

இந்த வழக்கு முழுக்க முழுக்க சந்தர்ப்ப சாட்சியங்களைக் கொண்டே நடந்துள்ளது.  பல இடங்களில் விசாரணை சரிவர நடக்கவில்லை என்பது தெரிய வந்துள்ளது.   இதில் முக்கிய சாட்சி சொன்ன பஞ்சயத்தார் இருவர் அந்த குழந்தையை  குற்றம் சாட்டப்பட்டவர்களுடன் சேர்ந்து பார்த்ததில்லை என தெரிவித்துள்ளனர்.

அது மட்டுமின்றி பல சாட்சிகள் வழக்கு நடந்து வெகுநாட்களுக்கு பிறகு விசாரிக்கப்பட்டுள்ளனர்.   அந்த சாட்சிகள் அளித்த விவரங்கள் தாமதமாக அதுவும் முழுமையாக இல்லாமல் நீதிமன்றத்தில் அளிக்கப்பட்டுள்ளது.   எனவே  இந்த விசாரணை சரியாக நடைபெறவில்லை என நாங்கள் கருதுகிறோம்.

அதனால்  இந்த மூவரையும் நாங்கள் விடுதலை செய்கிறோம்.  அது மட்டுமின்றி விசாரணைய சரியாக நடத்தாத காவல்துறை அதிகாரி மீது நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.    மரணமடைந்த குழந்தையின் பெற்றோர்களுக்கு மாநில அரசு ரூ.5 லட்சம் நஷ்ட ஈடு அளிக்க வேண்டும் என உத்தரவிடுகிறோம்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.